வளர்ப்பு மகள்களிடம் பாலியல் ரீதியான ஒழுங்கீன நடத்தை: ஆடவருக்குச் சிறை

2 mins read
a941fe29-0cf9-462d-8e04-138f6c5cbda0
படம்: - தமிழ் முரசு

திருட்டுக் குற்றத்திற்காகக் 2024ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஒருவர், தனது இரு வளர்ப்பு மகள்கள் குளியலறையில் இருப்பதை கைப்பேசியைப் பயன்படுத்தி பல காணொளிகள் எடுத்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்தக் குற்றச்செயல் நடந்தபோது, இளைய பெண்ணுக்கு 12 வயது, அவரது மூத்த சகோதரிக்கு 16 முதல் 17 வயது வரை இருக்கும்.

இரு பெண்கள் தொடர்புடைய பாலியல் ரீதியான ஒழுங்கீன நடத்தைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட 44 வயதான அந்த ஆடவருக்கு மே 5ஆம் தேதி, ஓராண்டு, 11 மாதங்கள், 15 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வேறொரு சம்பவத்தில் பெண்ணின் உள்ளாடைகள் போன்ற பொருள்களையும் திருடியிருக்கும் அந்த ஆடவர், இரு திருட்டுக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களைப் பாதுகாக்க அந்த ஆடவரின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காக அந்த ஆடவர் முன்னதாகச் சிறைத் தண்டனையை அனுபவித்திருந்தார்.

அந்த ஆடவர் சிறுமிகளின் தாயை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து பிடோக் ரெசவோர் ரோடு அருகே உள்ள அவர்களது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் குடியேறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2022, 2023ஆம் ஆண்டுகளில் மூத்த வளர்ப்பு மகள் வீட்டில் கழிவறையைப் பயன்படுத்தியபோது புகைப்படங்களும் காணொளிகளும் எடுத்துள்ளார். அச்சிறுமி பல்வேறு நிலைகளில் ஆடை இன்றி படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த ஐந்து படங்களையும் அவர் எடுத்துள்ளார்

2023ஆம் ஆண்டு ஜூலையில் இளைய வளர்ப்பு மகள் குளியலறையில் இருந்தபோது காணொளிகள் எடுத்துள்ளார்.

2024ஆம் ஆண்டில் அவரது திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையின்போது இந்தக் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்