கிட்டத்தட்ட 1.2 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள், அல்லது 1.33 மில்லியன் குடும்பங்களில் ஏறக்குறைய 90 விழுக்காட்டுக் குடும்பங்கள், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கப்பட்ட $300 சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.
இத்திட்டத்தில் பங்குபெறும் உணவங்காடிக் கடைகள், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வணிகக் கடைகள், பேரங்காடிகளில் $132 மில்லியனுக்குமேல் செலவிடப்பட்டுள்ளது.
வர்த்தக, தொழில்; கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் வியாழக்கிழமை (ஜனவரி 23) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் இதைத் தெரிவித்தார்.
இந்தப் பற்றுச்சீட்டுகள், 23,000 வணிகங்களிலும் உணவங்காடிக் கடைகளிலும் 400 கடைகளைக் கொண்ட எட்டுப் பேரங்காடிகளிலும் பயன்படுத்தப்படலாம். பற்றுச்சீட்டுகளின் பாதித் தொகை பேரங்காடிகளிலும் எஞ்சிய பாதி உணவங்காடி, வணிகக் கடைகளிலும் பயன்படுத்தப்படலாம். அவை டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்.
மேயர்கள் குழுத் தலைவரும் தென்மேற்கு வட்டார மேயருமான திருவாட்டி லோ, சிடிசி பற்றுச்சீட்டுத் திட்டத்தின் வெற்றி, இதில் பங்குகொள்ளும் வணிகங்கள், பங்காளித்துவ அமைப்புகள், தொண்டூழியர்களுக்கு இடையேயான துடிப்புமிக்க ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
சில உணவங்காடிகள், வணிகங்கள், பேரங்காடிகள் விலைத் தள்ளுபடிகளுக்கும் திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளன.
தங்கள் சிடிசி பற்றுச்சீட்டுகளை இன்னமும் கோராதோர், go.gov.sg/cdcv எனும் இணையப்பக்கத்தில் அவ்வாறு செய்யலாம்.
இத்திட்டத்தில் பங்குபெறும் உணவங்காடிகள், குடியிருப்புப் பகுதி வணிகக் கடைகள், பேரங்காடிகள் இடம்பெறும் பட்டியலை gowhere.gov.sg/cdcvouchers எனும் இணையப்பக்கத்தில் பார்க்கலாம்.