வேலை தேடுவோருக்கு சிங்கப்பூரில் நிலவரம் சாதகமாக இருப்பதுபோல் தெரிகிறது.
கருத்தாய்வு ஒன்றில் பங்கேற்ற நிறுவனங்களில் கிட்டத்தட்ட பாதி, இவ்வாண்டு நான்காம் காலாண்டில் கூடுதல் ஊழியர்களை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தன. இதன் தொடர்பில் முதன்முறையாக இவ்வாண்டு நம்பிக்கை தரும் வண்ணம் நிறுவனங்களின் போக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தாய்வில் பங்கேற்ற 46 விழுக்காட்டு நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன. 36 விழுக்காட்டு நிறுவனங்கள் தொடர்ந்து அதே எண்ணிக்கையில் ஊழியர்களை வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளன.
17 விழுக்காட்டு நிறுவனங்கள், தங்களின் ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்கும் எண்ணம் கொண்டுள்ளன. வேலை வாய்ப்பு நிறுவனமான மேன்பவர் குருப், செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 10) இத்தகவல்களை வெளியிட்டது.
கடந்த ஜூலை மாதம் அந்நிறுவனம் 525 நிறுவனங்களைக் கொண்டு கருத்தாய்வை நடத்தியது. புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பதன் தொடர்பில் இவ்வாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை அவை வரைந்துள்ள திட்டங்கள் அந்தக் கருத்தாய்வில் ஆராயப்பட்டன.
வேலை வாய்ப்புகள் தொடர்பில் நிலவரம் எவ்வளவு தூரம் நம்பிக்கை தரும் வண்ணம் அமைந்துள்ளது என்பதை கணிப்பது அந்தக் கருத்தாய்வின் இலக்கு. ஊழியர்களைக் குறைக்க நினைக்கும் நிறுவனங்களின் விகிதத்தை, கூடுதலானோரை வேலைக்கு எடுக்கத் திட்டமிடுபவற்றின் விகிதத்தலிருந்து கழிப்பதன் மூலம் அது கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் நான்காம் காலாண்டுக்கான விகிதம் 29 விழுக்காடாகப் பதிவானது. மூன்றாம் காலாண்டில் பதிவான விகிதத்தைக் காட்டிலும் அது ஒன்பது விழுக்காடு அதிகமாகும்.
அதேவேளை, சென்ற ஆண்டு நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு நான்காம் காலாண்டுக்கான விகிதம் ஏழு விழுக்காடு குறைவு.

