கடந்த நான்கு ஆண்டுகளில் சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள், ‘எஸ்ஜி 60’ பற்றுச்சீட்டுகளுக்கு அரசாங்கம் $3.995 பில்லியன் செலவிட்டுள்ளது என்றும் அதற்கு மக்கள் மத்தியில் வலுவான ஆதரவு கிடைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தொகையில், $2.127 பில்லியன் குடியிருப்பு வட்டார வணிகர்கள், உணவங்காடிக் கடைக்காரர்களிடம் பொருள் வாங்குவதற்கும் $1.868 பில்லியன் பேரங்காடிகளில் பொருள் வாங்குவதற்கும் வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) அதிகாரபூர்வ தொடக்கம் கண்ட சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் திட்டம் 2026 நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங் இத்தகவல்களை வெளியிட்டார்.
மேலும், ‘‘இத்திட்டம் புத்தாண்டை அர்த்தமுடன் தொடங்குவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த ஆண்டு இத்திட்டத்தில் பங்குபெறும் வணிகர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 24,000ஆக அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை 23,000ஆக இருந்தது,’’ என்றார் அவர்.
இந்த விரிவாக்க நடவடிக்கையால் குடியிருப்பாளர்கள் தங்களது வட்டாரத்திலேயே உணவு, அன்றாடத் தேவைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட அத்தியாவசியப் பொருள்களையும் சேவைகளையும் எளிதில் பெற்றுக்கொள்ள முடிகின்றது என்று திருவாட்டி லோ குறிப்பிட்டார்.
இத்திட்டத்தில் 400க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட எட்டுப் பேரங்காடிக் குழுமங்களும் பங்கேற்கின்றன.
மேயர்கள் குழுவின் தலைவரும் கலாசார, சமூக, இளையர்துறை, வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சருமான திருவாட்டி லோ, ‘‘கடந்த ஏழு தவணைகளில் 97.7 விழுக்காட்டிற்கும் அதிகமான ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளைக் குடும்பங்கள் பயன்படுத்தியுள்ளன,” என்றார்.
‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளைக் குடும்பங்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வதாகவும் அவை சிங்கப்பூரர்களிடையே தொடர்ந்து நல்லாதரவைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 12 மாதங்களில், ‘சிடிசி‘ பற்றுச்சீட்டுகள், ‘எஸ்ஜி 60’ பற்றுச்சீட்டுகளுக்காக ஏறத்தாழ $2.398 பில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகத் திருவாட்டி லோ குறிப்பிட்டார்.
“அதில் $1.22 பில்லியன், குடியிருப்பு வட்டார வணிகர்கள், உணவங்காடிக் கடைக்காரர்களிடமும் $1.178 பில்லியன் தொகை பேரங்காடிகளிலும் செலவிடப்பட்டது,’’ என்று மேலும் விளக்கினார் அவர்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மொத்தத் தொகையில் 89 விழுக்காடு உணவு, பானங்கள், அன்றாட உணவுகள், அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குச் செலவிடப்பட்டுள்ளது என்ற மேயர் லோ, சிங்கப்பூரர்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் இத்திட்டம் அடைந்துள்ள வெற்றியை இது சுட்டுவதாகவும் சொன்னார்.
“நீடித்த வகையில் இத்திட்டத்தின் வாயிலாகக் கடந்த 12 மாதங்களில் $2.398 பில்லியன் செலவிடப்பட்டிருப்பது நமது அக்கம்பக்க உணவங்காடிக் கடைக்காரர்களுக்கும் ஊக்கமளித்து வளம் சேர்த்துள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.
விநியோகம் செய்யப்பட்டுள்ள பற்றுச்சீட்டுகள் கூடுதலாக மின்னிலக்க மறுமலர்ச்சிக்கு வித்திட்டதாகவும் திருவாட்டி லோ கூறினார்.
‘‘எனவே, அதுவரை மின்னிலக்க முறையைப் பயன்படுத்தியிராத சக சிங்கப்பூரர்களையும் கடைக்காரர்கள் சிலரையும் மின்னிலக்கப் பயன்பாட்டிற்கு மாற்றிட இந்த மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகள் உதவின,’’ என்றார் அவர்.

