கடந்த 2020ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட திரு லூயிஸ் இங், 46, அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
நீ சூன் குழுத் தொகுதியின் புளோக் 846ல் செவ்வாய்க்கிழமை காலை (ஏப்ரல் 22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலை வெளியிட்டார் திரு இங்.
இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்ட அவருடன், அவரது சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு டெரிக் கோ, 57, திருவாட்டி கேரி டான், 43, இருவரும் அரசியலுக்கு விடைகொடுப்பதாக அச்செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.
திரு டெரிக், திருவாட்டி கேரி இருவரும் ஒரு தவணைக் காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அதிக அளவில் குரல்கொடுத்தவராக அறியப்படும் திரு இங், தனது மூன்று மகள்களுடன் கூடுதல் நேரம் செலவழிப்பதற்காக அரசியலிலிருந்து விலகுவதாகச் சொன்னார்.
“இந்தப் பணி மீதான ஆர்வம் முற்றுப்பெற்றுவிட்டதால் விலகவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது ஒருபோதும் எனக்கொரு வேலையாக இருந்ததில்லை,” என்றார் திரு இங்.
சந்திப்பின்போது மிகவும் உணர்ச்சிவயப்பட்டுக் கண்கலங்கினார் திரு இங். ஒருகட்டத்தில் திரு இங்கின் கண்ணீரைத் துடைக்க உதவி செய்தார் அமைச்சர் சண்முகம்.
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த மிகவும் திணறியவாறே பேசிய திரு இங், “நாடாளுமன்ற உறுப்பினராகச் செயலாற்றியது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
திரு இங்கின் முடிவு தொடர்பில் கருத்துரைத்த திரு சண்முகம் அரசியலில் தொடருமாறும், இம்முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் பிரதமர் திரு இங்கிடம் பலமுறை பேசியதாகக் குறிப்பிட்டார்.
எனினும் திரு இங், தமது பிள்ளைகள் நலனையும் குடும்பநலனையும் கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்ததாகத் திரு சண்முகம் கூறினார்.
பதவி உயர்வு நிமித்தமாகவும், வாழ்வியல் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குடும்பம் மற்றும் கற்றல் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகத் திரு டெரிக் கோ, திருவாட்டி கேரி டான் இருவரும் அரசியலில் தொடர்ந்து நீடிக்க இயலவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
‘ஏக்கர்ஸ்’ எனப்படும் விலங்குநல ஆய்வு மற்றும் கல்வி அமைப்பின் நிறுவனர் திரு இங்.
‘டாட்டர்ஸ் ஆஃப் டுமாரோ’ எனும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான திருமதி டான், நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து நீ சூன் சவுத் தொகுதியைப் பிரதிநிதித்தார்.
“தொகுதியிலிருந்து விலகுவது எளிதான முடிவன்று. ஆனால் இளையவரான, அதிக ஆற்றல் மிக்கவரான ஒருவருக்கு வழிவகுக்க இது சரியான நடவடிக்கை,” என்று தெரிவித்தார் திருவாட்டி டான்.
தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த உழைக்கப்போவதாகச் சொன்ன அவர், சிங்கப்பூரர்களின் நல்வாழ்வை மலரச் செய்யும் இலக்கில், தாம் கற்றுக்கொண்டதை மீண்டும் சமூகத்திற்குக் கொண்டுவர உறுதிகூறினார்.
அரசியலிலிருந்து நீ சூன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வுபெறுவது எதிர்பாராத திருப்பம் என்று குறிப்பிட்ட அமைச்சர் சண்முகம், அவர்கள் மக்களுக்கும் தொகுதிக்கும் தொடர்ந்து சேவையாற்றுவார்கள் என்று சொன்னார்.

