நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டம் அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் கூடுதல் வளங்களைக் கொண்ட குடும்பங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கக்கூடாது என்றார் அவர்.
நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டத்தை மறுஆய்வு செய்வது குறித்து கல்வி அமைச்சு திட்டமிடுகிறதா என்று அமைச்சர் சானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த திரு சான், “ஆமாம். திட்டத்தை மறுஆய்வு செய்ய அமைச்சு திட்டமிடுகிறது. சிங்கப்பூரர்கள் என்ற அடிப்படையில், நமது செயல்முறைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து எப்போதும் யோசித்துக்கொண்டே இருக்க வேண்டும். தற்போது நடப்பில் உள்ள அணுகுமுறை எந்தக் குறையுமில்லாதது, அதுவே போதும் என்று இருந்துவிடக்கூடாது,” என்று கூறினார்.
ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று மாஜு முகாமில் உள்ள தேசிய முகாமின் திறப்பு விழா நடைபெற்றது.
அதையொட்டி நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வில் சிங்கப்பூரின் சீருடை அமைப்புகளைச் சேர்ந்த 440க்கும் அதிகமான இளம் தலைவர்களிடம் திரு சான் பேசினார்.
“இன்றைய சூழலில் பலரால் நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டம் மூலம் விண்ணப்பம் செய்து பள்ளிகளுக்குச் செல்ல முடிகிறது. அவர்களில் பெரும்பாலானோர் கூடுதல் வளங்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்,” என்றார் அவர்.
வளங்கள் இல்லாதபோதிலும் ஆற்றல்மிக்க மாணவர்களை அடையாளம் காண பள்ளிகள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்று அமைச்சர் சான் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“பல்வேறு துறைகளில் திறமைமிக்க மாணவர்களை ஆசிரியர்கள் அடையாளம் காண வேண்டும். இது வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பொருந்தும்,” என்று அவர் தெரிவித்தார்.
நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டம் மூலம் உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு இடத்தை பெற்றுத் தர கூடைப்பந்துப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் பணம் வாங்கிய விவகாரம் ஜூலை மாதம் வெளிச்சத்துக்கு வந்தது.
குறைந்தது $45,000 பெற்றுக்கொண்டு ஆங்கிலோ சீனத் தொடக்கக்கல்லூரி, டன்மன் ஹை பள்ளி போன்ற பள்ளிகளில் இடம் கிடைக்க மாணவர்களுக்கு அந்தப் பயிற்றுவிப்பாளர் உதவியதாக நம்பப்படுகிறது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டம் அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்று அமைச்சர் சான் வலியுறுத்தியுள்ளார்.