இரட்டிப்பானது வடக்கு-கிழக்கு ரயில் பாதையின் நம்பகத்தன்மை

இரட்டிப்பானது வடக்கு-கிழக்கு ரயில் பாதையின் நம்பகத்தன்மை

2 mins read
ea7c1231-1ba5-4faa-afcb-7bc3e5d4aa6b
வடக்கு-கிழக்கு ரயில் பாதை நிலையங்களில் ஒன்று. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) கட்டமைப்பின் நம்பகத்தன்மை கடந்த மாதம் அதிகரித்தது.

அதிலும் வடக்கு-கிழக்கு ரயில் பாதையின் நம்பகத்தன்மை, முந்திய மாதத்துடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பாகியுள்ளது. நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சென்ற ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், ஐந்து நிமிடத்திற்கும் மேல் தாமதமடைந்த சம்பவங்களுக்கு இடையில் ரயில்கள் சராசரியாக 1.74 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்திருந்தன. அதற்கு முந்திய ஓராண்டில் அது 1.67 மில்லியன் கிலோமீட்டராகப் பதிவாகியிருந்தது.

ரயில் நம்பகத்தன்மையைப் பொறுத்தவரை சிங்கப்பூரின் இலக்கைவிட அது அதிகமாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பிப்ரவரி மாதம் ரயில் சேவைகள் பொதுவாகப் பெரும்பாலும் சரியான நேரத்தைக் கடைப்பிடித்தன. 99.46 விழுக்காட்டு ரயில் சேவைகள், குறிப்பிடப்பட்ட நேரத்திலிருந்து இரண்டு நிமிடத்திற்குள் வந்துசென்றன. ஜனவரி மாதம் பதிவான 99.24 விழுக்காட்டைவிட அது அதிகம் என்று ஆணையம் குறிப்பிட்டது.

பிப்ரவரியில் எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் வடக்கு-கிழக்குப் பாதை ஆக நம்பகமான ரயில் பாதையாக விளங்கியது. அந்தப் பாதையில் தாமதம் ஏற்பட்ட சம்பவங்களுக்கு இடையில் ரயில்கள் பயணம் செய்த தொலைவு 4.42 மில்லியன் கிலோமீட்டர். அது ஜனவரியில் பதிவான 2.21 மில்லியன் கிலோமீட்டரைப் போன்று இரு மடங்கு.

அதற்கு அடுத்த நிலையில் எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் டெளன்டவுன் பாதை வந்தது. அந்தப் பாதையில் தாமதம் ஏற்பட்ட சம்பவங்களுக்கு இடையில் ரயில்கள் பயணம் செய்த தொலைவு ஜனவரியில் பதிவான 2.79 மில்லியன் கிலோமீட்டரிலிருந்து சற்று அதிகரித்து பிப்ரவரியில் 2.8 மில்லியன் கிலோமீட்டரானது.

அதே வேளை, எஸ்எம்ஆர்டி இயக்கும் வட்டப் பாதையில் தாமதம் ஏற்பட்ட சம்பவங்களுக்கு இடையில் ரயில்கள் பயணம் செய்த தொலைவு ஜனவரியில் 1.83 மில்லியன் கிலோமீட்டராக இருந்தது. அது பிப்ரவரியில் 1.8 மில்லியன் கிலோமீட்டருக்குக் குறைந்தது.

அதேபோல், எஸ்எம்ஆர்டி இயக்கும் கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் தாமதம் ஏற்பட்ட சம்பவங்களுக்கு இடையில் ரயில்கள் பயணம் செய்த தொலைவு 1.45 மில்லியன் கிலோமீட்டரிலிருந்து சற்றுக் குறைந்து 1.44 மில்லியன் கிலோமீட்டராகப் பதிவானது.

எஸ்எம்ஆர்டியின் மற்றொரு ரயில் தடமான வடக்கு-தெற்குப் பாதையின் நம்பகத்தன்மைதான் ஆகக் குறைவாக உள்ளது. தாமதம் ஏற்பட்ட சம்பவங்களுக்கு இடையில் ரயில்கள் பயணம் செய்த தொலைவு, ஜனவரியைப் போன்றே பிப்ரவரியிலும் 1.24 மில்லியன் கிலோமீட்டராகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்