நேப்பாள-சீன வெள்ளம்: சிங்கப்பூர்த் தலைவர்கள் இரங்கல்

நேப்பாள-சீன வெள்ளம்: சிங்கப்பூர்த் தலைவர்கள் இரங்கல்

2 mins read
பாதிக்கப்பட்டோர்க்குத் தூதரக உதவி; துயர் தணிப்பு உதவித் திட்டத்துக்கு ஏற்பாடு
30724ce6-aa96-4ca7-866c-fc521f3e9f40
நேப்பாள-சீன எல்லையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) ஏற்பட்ட வெள்ளத்தில் 160 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,500 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்க நேப்பாள, சீன அதிகாரிகளுடன் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தொடர்பில் உள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அவர் அவ்வாறு கூறினார்.

வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் பேரழிவுக்கும் திரு வோங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீட்பு, துயர் தணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடனும் நெருக்கடி நேர ஊழியர்களுடனும், நேபாள, சீன மக்களுடனும் சிங்கப்பூர் துணைநிற்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். காணாமற்போனவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேப்பாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் கிட்டத்தட்ட 160 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும், சிங்கப்பூரர்கள் இருவர் உட்பட ஏறக்குறைய 1,500 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில், நேப்பாளத்தில் துயர் தணிப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கில் மனிதநேய உதவித் திட்டத்திற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துவருவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோரின் உடனடித் தேவைகளுக்குக் கைகொடுக்கும் விதமாக அது அமைந்திருக்கும் என்றார் அவர்.

புதுடெல்லியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகம், தூதரக உதவிகளை வழங்கும் குழு ஒன்றை நேப்பாளத்திற்கு அனுப்பிவைக்கும் என்றார் அமைச்சர்.

மேலும், நேப்பாள-சீன எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர்க்குத் தமது ஆழந்த இரங்கலை டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துக்கொண்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கும்படியும் உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றும்படியும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
வெள்ளம்நேப்பாளம்பிரதமர்லாரன்ஸ் வோங்இரங்கல்