நேப்பாளப் பெருவெள்ளத்தில் சிக்கி மாயமான ஒன்பது சிங்கப்பூரர்களின் குடும்பத்தாரிடமிருந்து மரபணு மாதிரிகளைச் (டிஎன்ஏ) சிங்கப்பூர்க் காவல்துறை சேகரித்து வருகிறது.
மீட்கப்படும் உடல்களை அடையாளம் காண்பதற்காக, அந்த மாதிரிகள் தொடர்பான விவரங்கள் நேப்பாள அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
காணாமற்போன ஒன்பது சிங்கப்பூரர்கள் ரெங்கராஜன் பிரபு, ஷாலினி தேவி எலன் சோசன், சுப்பிரமணியம் திரவியம், ராஜேஸ்வரன் அய்யாவூ, எஸ்டி லோ, கோஷ் அதிதி, எங் கிட் குயென், சுபாக்ஷி ராவ்லா, சுமித் ராவ்லா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திபெத், நேப்பாளம் ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் இவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2ஆம் தேதி நிலவரப்படி, நேப்பாளப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,100க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதுடன், காணாமற்போன 3,900 பேரைத் தேடும்பணி தொடர்கிறது. கிட்டத்தட்ட 12,000 பேர் வரை இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல்போன சிங்கப்பூரர்களின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு மரபணு மாதிரிகளைச் சேகரித்து வருவதைக் காவல்துறைப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
மேலும், இந்த மாதிரிகள் மாயமானவர்களை அடையாளம் காண உதவக்கூடும் என்றும் நேப்பாள அதிகாரிகள் மேற்கொண்டுவரும் பேரிடர் நிவாரணம், பாதிக்கப்பட்டோரை அடையாளம் காணும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் சிங்கப்பூரின் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் இது அமையும் என்றும் அவர் கூறினார்.
பிள்ளைகளிடமிருந்து மரபணு மாதிரி
அரசு நீதிமன்ற ஊழியரான 40 வயது ஷாலினியின் ஏழு வயது மகளிடமிருந்து மரபணு மாதிரி சேகரிக்கப்படும். அரசு நீதிமன்றப் பேச்சாளர் அதனை உறுதிப்படுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்குத் தேவையான ஆதரவையும் உதவியையும் வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
ஷாலினியின் கணவர் செல்வ கணேஷ் (43), தாமும் தம் மகளும் இந்தச் சூழலை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மரபணு மாதிரி வழங்கத் தம் மகள் சம்மதித்துள்ளதாகவும் கூறினார்.
மீட்கப்படும் சடலங்களை அடையாளம் காண்பதற்காக மரபணு பரிசோதனைகளை நடத்தி வருவதாக நேப்பாளக் காவல்துறையினர் ஆகஸ்ட் 31ஆம் தேதி தெரிவித்தனர்.
மாயமானோரின் பெற்றோர் அல்லது பிள்ளைகள் போன்ற முதன்மை ரத்த உறவினர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் மரபணு பரிசோதனை செய்து, அதன் விவரங்களை மின்னஞ்சல் வழியாக அனுப்பிவைக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நேப்பாள அரசின் கோரிக்கையை ஏற்று, பேரிடரால் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காணும் சிறப்புப் பேரிடர் நிபுணத்துவக் காவல் அதிகாரிகளின் குழுவைச் சிங்கப்பூர் காவல்துறை அனுப்பவுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதித் திரட்டுக்கு அரசாங்கம் வழங்கிய 100,000 அமெரிக்க டாலர் ($127,000) நன்கொடையுடன், பொதுமக்கள், சிங்கப்பூர் ஆயுதப்படையின் நிவாரணப் பொருள்களையும் அரசாங்கம் அனுப்பி வைக்கவுள்ளது.
செஞ்சிலுவைச் சங்க இயக்கங்களின் மூலம் இதுவரை $1 மில்லியனுக்கும் அதிகமான நிதி நேப்பாளப் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு அளிக்கத் திரட்டப்பட்டுள்ளது.


