சிங்கப்பூரின் எரிசக்தி, தொழில்துறைகள் கரிம வெளியேற்றம் அற்றவையாக விளங்குவதற்கு உதவும் வகையில் கூடுதல் ஆய்வுகளுக்காக 90 மில்லியன் வெள்ளி நிதித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் பயன்பாடு, நீடித்த நிலைத்தன்மை மிக்க விமான எரிபொருள் போன்ற சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத ரசாயனங்கள், எரிபொருள்களின் உற்பத்தி முதலியவை தொடர்பான தேசிய அளவிலான ஆய்வுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான ‘த கிரியேட் தீமேட்டிக் புரோகிராம்’, பெரிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டம் என்று தேசிய ஆய்வு, மேம்பாட்டுக்கான நிரந்தரச் செயலாளர் பேராசிரியர் டான் கோர் சுவான் கூறினார்.
ஜூலை 22ஆம் தேதி, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.
2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் அறவே அற்ற நாடாக விளங்க சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.
இந்நிலையில், புதிய, குறைவான கரிம வெளியேற்றம் கொண்ட எரிசக்திக்கான மாற்று வழிகளை சிங்கப்பூர் நாடவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் அதன் மின்உற்பத்திக்குப் பெரும்பாலும் இயற்கை எரிவாயுவை நம்பியுள்ள நிலையில், அண்டை நாடுகளிலிருந்து பசுமை மின்சாரத்தை இறக்குமதி செய்யத் திட்டமிடுகிறது.
அத்துடன், ஹைட்ரஜன், புவிவெப்ப எரிசக்தி, அணுசக்தித் தொழில்நுட்பம் போன்ற மாற்று வழிகளையும் அது நாடுவதைப் பேராசிரியர் டான் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய ஆய்வு அறக்கட்டளையின் புதிய ஆய்வுத் திட்டத்தின்கீழ், ஒன்பது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அவை ஒவ்வொன்றும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும்.
சிங்கப்பூரில் ஹைட்ரஜன் பயன்பாட்டுக்கான கட்டமைப்பை உருவாக்குதல், கரிம வெளியேற்றம் அறவே இல்லாத எரிசக்திக் கலவையின் செயல்பாடு குறித்த புதிய கண்ணோட்டங்களை உருவாக்குதல், மின் உற்பத்திக்கான அமோனியா எரிபொருள் மின்கலங்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு இத்திட்டம் பங்களிக்கும்.
ஏற்கெனவே, தேசிய ஹைட்ரஜன் உத்தியை சிங்கப்பூர் தொடங்கியுள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காட்டு மின் உற்பத்திக்கு ஹைட்ரஜனைப் பயன்படுத்துவது அதன் இலக்கு.
மேலும், நீடித்த நிலைத்தன்மை மிக்க ஜூரோங் தீவுத் திட்டத்தின்கீழ், நீடித்த நிலைத்தன்மை மிக்க பொருள்களின் உற்பத்தியை 2019ஆம் ஆண்டு இருந்ததைப்போல் நான்கு மடங்கு உயர்த்தவும் இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டுக்கு ஆறு மில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது நோக்கம்.