புதுவகைப் பெருந்தொற்றைக் கையாள உதவக்கூடிய ஏஐ தளம்

2 mins read
33197384-f46f-43d5-855e-a8e36ff13bc9
அடுத்த 20 ஆண்டில் கொவிட்-19 போன்ற மற்றொரு பெருந்தொற்று வருவதற்கான சாத்தியம் ஏறக்குறைய 35 விழுக்காடு இருப்பதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடல்நலனைப் பாதிக்கக்கூடிய புதிய மிரட்டல்களைக் கண்டறியும் ஆற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தளம் திங்கட்கிழமை (டிசம்பர் 1) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நோய்ப்பரவல் குறித்த அறிகுறிகளைப் பாரம்பரிய கண்காணிப்பு முறைகளைக் காட்டிலும் முன்கூட்டியே கண்டறிய அது உதவும் என்று கூறப்பட்டது. நோய்க்கிருமியின் மரபணுத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து ஒருங்கிணைப்பதன் மூலம் அது சாத்தியமாகும் என்று சொல்லப்பட்டது. மருத்துவத் தகவல்கள், மனிதர்களும் விலங்குகளும் நடமாடும் முறைகள், பருவநிலைத் தரவுகள் முதலியவையும் பகுப்பாய்வு செய்யப்படும்.

புதிய தளம், ‘பாத்ஜென்’ என்று அழைக்கப்படுகிறது. டியூக்-என்யுஎஸ் நோய்ப்பரவல் ஆயத்த நிலையம் அதனை உருவாக்கியது. தெமாசெக் அறநிறுவனம், த கேட்ஸ் அறநிறுவனம், ஃபிலாந்த்ரஃபி ஏ‌ஷியா அலையன்ஸ் ஆகியவை அதற்கு ஆதரவளித்துள்ளன.

பாத்ஜென் தளத்தை இணைந்து உருவாக்குவதில் தென்கிழக்காசியாவின் ஆறு நாடுகள் பங்கெடுக்கவிருக்கின்றன. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, ஃபிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகியவையே அவை. தெமாசெக் அறநிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு இங் பூன் ஹியோங் அந்தத் தகவலை முன்னோட்ட நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.

தளம், அடுத்த 18 மாதத்தில் பயன்படுத்தத் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு (2026) முன்னோட்டச் சோதனைகள் நடத்தப்படும். 2027ல் அது கட்டங்கட்டமாகப் பயன்பாட்டுக்கு வரும்.

அடுத்த 20 ஆண்டில் கொவிட்-19 போன்ற மற்றொரு பெருந்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் ஏறக்குறைய 35 விழுக்காடு இருப்பதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார். கொவிட்-19 குறித்த நினைவுகள் மங்கத் தொடங்கினாலும் அரசாங்கங்கள் அவற்றின் முன்னுரிமைகளை மாற்றத்தொடங்கிவிட்டாலும் அவ்வாறு நேரக்கூடும் என்றார் அவர். பாத்ஜென் முன்னோட்ட நிகழ்ச்சியில் திரு ஓங் பேசினார்.

சிங்கப்பூர் அடுத்த பெருந்தொற்றைச் சந்திக்கத் தொடர்ந்து தயாராக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். பிரச்சினைகள் பெரிதாகும் முன்பே அவற்றைக் கணித்து ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றார் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங்.

பெருந்தொற்றின்போது நோய்ப்பரவல், நோயின் கடுமை, மரண விகிதம் முதலியவற்றைக் குறைவாக வைத்துக்கொள்ள முன்கூட்டியே திட்டமிடுவதும் நடவடிக்கை எடுப்பதும் ஆயத்தமாக இருப்பதற்கான பொருள் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் கடந்த சில ஆண்டுகளில் பெருந்தொற்றால் ஏற்படக்கூடிய சவால்களைச் சமாளிக்கப் பல்வேறு ஆயத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரசாங்கம் அதன் தொடர்பில் தனியார் துறையினருடன் பலன்தரக்கூடிய பங்காளித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

நோய்க்கிருமி உருவாகும் காலம், இனப்பெருக்க எண்ணிக்கை, மனிதர்களின் நடமாட்ட விகிதம், பரவும் முறைகள், பொதுமக்களில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் முதலிய கூறுகளைப் பாத்ஜென் தளம் கணிக்கக்கூடும்.

கொவிட்-19 வந்தபோது சிங்கப்பூருக்கு அந்த அடிப்படைக் கூறுகளைப் பற்றி எந்தப் புரிதலும் இல்லை என்றார் திரு ஓங்.

“தொடக்கத்திலேயே அடிப்படைக் கூறுகள் அனைத்தும் எவ்வளவு இயலுமோ அந்த அளவுக்குத் துல்லியமாக முடிவுசெய்யப்பட வேண்டும். பாத்ஜென் தளம் அதனைச் செய்ய உதவும் என்று நம்புகிறேன்,” என்று அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்