வானிலை ஆய்வாளர்கள் இனி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வானிலை மாற்றங்கள் தொடர்பில் துல்லியமான கணிப்புகளை வழங்க முடியும்.
கனமழை, பலத்த காற்று குறித்த வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்த இது வழியமைக்கும்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பருவநிலை ஆய்வுக்கான சிங்கப்பூர்க் கூட்டணி, சிங்கப்பூர், தென்கிழக்காசியாவிற்கான வெப்பமண்டல வானிலை, காலநிலை ஆய்வை மேம்படுத்துவதற்கும் வானிலை, காலநிலை அறிவியலில்திறனாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கைகொடுக்கும்.
இக்கூட்டணியை, தேசியச் சுற்றுப்புற வாரியம், அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு (ஏஸ்டார்), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நிறுவியுள்ளன.
‘கோரஸ்’ என்றழைக்கப்படும் இப்புதிய கூட்டணி, இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2025 திட்டத்தின்கீழ், $25 மில்லியன் நிதியுதவி பெறும் வானிலை அறிவியல் ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்தும்.
சிங்கப்பூர் பருவநிலை ஆய்வு நிலையம் வழிநடத்தும் கோரஸ் கூட்டணி, தேசிய அளவில் வானிலை அறிவியல் திறன்களை விரிவுபடுத்துவதற்காக முன்னணி ஆய்வு நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது.
வானிலை அறிவியல் ஆய்வுத் திட்டத்தின்கீழ் 10 ஆய்வுத் திட்டங்கள், வானிலை ஆய்வுகளின் பயன்பாட்டை மேம்படுத்துதல், அடுத்த தலைமுறை வானிலை மாதிரிகளை உருவாக்குதல், மேம்பட்ட பிந்தைய செயலாக்க நுட்பங்கள் மூலம் வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தை மேம்படுத்துதல் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தவிருக்கின்றன.
அவற்றில் ஓர் ஆய்வுத் திட்டம், கடல், நிலப்பரப்பு நிலைகளால் சிங்கப்பூர் வானிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைக் கருத்தில்கொண்டு மேம்பட்ட வானிலை முன்னறிவிப்பு அமைப்புகளை உருவாக்க முற்படும்.
தொடர்புடைய செய்திகள்
இது கடுமையான சுமத்ரா புயல் போன்ற வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கவும் ஏதுவாக அமையும். இந்த ஆய்வுத் திட்டங்களுக்குப் பருவநிலை ஆய்வு – மதிப்பீட்டுக்கான சோதனைக்களம் ஆதரவு வழங்கும்.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு வளாகத்தில் கூட்டணி தொடங்கப்பட்டது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கூட்டணியைத் தொடக்கிவைத்தார்.
“தென்கிழக்காசியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் கடல்சார் கண்டம் உலகளாவிய காலநிலை அமைப்பின் ‘இயந்திர அறை’ ஆகும்.
“நமது பகுதி பருவமழைகளையும் எல் நினோவையும் பாதிப்பதால், அது பசிபிக்கிற்கும் அதற்கு அப்பாலும் பரந்த உலகளாவிய தாக்கங்களைக் கொண்டுள்ளது,” என்று தமது உரையில் டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.
உள்ளூர் வானிலையின் கணிக்க முடியாத தன்மை காரணமாக, ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தப் பகுதியின் காலநிலை, வானிலையைக் கணக்கிடுவதும், கணிப்பதும் சவாலாக இருக்கிறதென டாக்டர் ஜனில் கூறினார்.
“கோரஸ், வானிலை, காலநிலை அறிவியலில் திறனாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வெப்பமண்டல நகர்ப்புற வானிலை, காலநிலை அறிவியலில் சிங்கப்பூரை முன்னணி நிலையில் நிலைநிறுத்தவும் உதவும்,” என்றார் அவர்.
கோரஸ் கூட்டணியின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள தாம் ஆவலுடன் இருப்பதாகச் சொன்ன டாக்டர் ஜனில், இக்கூட்டணி வானிலை முன்னறிவிப்புகளைத் தாண்டி, வரும் ஆண்டுகளில் கடல் மட்ட உயர்வு போன்றவற்றிலும் கவனம் செலுத்தும் ஆற்றலையும் கொண்டிருக்கலாம் என்றார்.