நாய்ப் பயிற்சியாளர்களுக்குப் புதிய விலங்குநல விதிமுறைகள் அறிமுகம்

நாய்ப் பயிற்சியாளர்களுக்குப் புதிய விலங்குநல விதிமுறைகள் அறிமுகம்

செல்லப் பிராணிகளைப் பழக்கும் இடங்களில், அவை பராமரிக்கப்படும் நேரத்தில் பராமரிப்பாளர்கள் கண்டிப்பாக அருகில் இருக்க வேண்டும்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 Oct 2026 - 7:23 pm

2 mins read

நாய் பயிற்சித் துறைக்கு முதன்முறையாக விலங்குநல விதிமுறைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், செல்லப் பிராணிகளைப் பயிற்றுவிக்கும் இடங்களில் பராமரிப்பாளர்களுக்கான விதிமுறைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தேசிய வளர்ச்சி, வெளியுறவு துணையமைச்சர் ஆல்வின் டான் தேசிய நூலகக் கட்டடத்தின் ‘த பிளாசா’வில் உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (அக்டோபர் 3) நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய விதிமுறைகளை அறிவித்தார்.

“இந்த முயற்சிகள் நாய் பயிற்சித் துறையின் தர நிலைகளை மேலும் வலுப்படுத்தும். அத்துடன், விலங்குநலன், தொழில்துறைத் தகுதிகள் சார்ந்த தெளிவான வழிகாட்டுதல்களைப் பெற்ற பயிற்சியாளர்களால் தங்கள் செல்லப் பிராணிகள் பராமரிக்கப்படுகின்றன என்ற கூடுதல் நம்பிக்கையை இது விலங்கு உரிமையாளர்களுக்கு அளிக்கும்,” என்று திரு டான் கூறினார்.

புதிய விதிமுறையின்படி, நாய்களைக் கடுமையான தண்டனைகள் அல்லது மின்சாரக் கழுத்துப்பட்டைகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அதன் இயல்பைப் பாதிக்காமல், வெறுப்புணர்வைத் தூண்டாமல் பயிற்சியளிக்க வேண்டும்.

செல்லப் பிராணிகளைப் பயிற்றுவிக்கும் இடங்களில் விலங்குகளுக்குக் காயங்கள், உயிரிழப்புகள் ஏற்பட்ட பல சம்பவங்களைத் தொடர்ந்து, பராமரிப்பாளர்களின் தகுதித்திறன், பிராணிகளைக் கண்காணிக்கும் முறை, வாடிக்கையாளர்களுடனான தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் அவற்றுக்கான ‘விலங்குநல விதிமுறை திருத்தியமைக்கப்பட்டது.

விலங்கு, கால்நடை மருத்துவச் சேவை அமைப்பின் (ஏவிஎஸ்) இந்த நடவடிக்கை, சிங்கப்பூரின் விலங்குகளின் நலன், உலகத் தரத்திற்கு இணையானதாக உறுதிப்படுத்தும்.

செல்லப் பிராணிகளைப் பழக்கும் இடங்களில், அவை பராமரிக்கப்படும் நேரத்தில் பராமரிப்பாளர்கள் கண்டிப்பாக அருகில் இருக்க வேண்டும் என்பது முக்கிய மாற்றமாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் விலங்குப் பராமரிப்பில் கவனம் செலுத்தாததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக 54 புகார்களை ஏவிஎஸ் விசாரித்துள்ளது.

நாய்ப் பயிற்சியாளர்கள் விலங்குகளைக் கடுமையாக நடத்தும் காணொளிகள் இணையத்தில் பரவியதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சத் தரநிலைகளைப் பின்பற்றத் தவறினால், அது விலங்குநல விசாரணைகளின்போது குற்றச்சாட்டாகக் கருதப்படும் என்று அமைச்சர் ஆல்வின் டான் எச்சரித்தார். பொதுமக்களின் கருத்துகளை அறிந்து, விலங்கு உரிமையாளர்களுக்கான 2017ஆம் ஆண்டின் விதிமுறைகளையும் ஏவிஎஸ் திருத்தியமைக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விலங்குசெல்லப் பிராணிபராமரிப்புவிதிமுறை