ஆண்ட்ராய்ட் பயனர்களுக்குப் புதிய மோசடி தடுப்புச் செயலி

ஆண்ட்ராய்ட் பயனர்களுக்குப் புதிய மோசடி தடுப்புச் செயலி

படம்: சாவ்பாவ்

14 Oct 2026 - 3:20 pm

2 mins read

கூகல் டீப்மைண்ட் நிறுவனமும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் காவ்டெக் அமைப்பும் இணைந்து, ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு நேரலையில் மோசடிகள் குறித்த எச்சரிக்கையை வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு அணுகுமுறையை உருவாக்கி வருகின்றன.

ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்குள்ளேயே நேரடியாக இயங்கும் இந்தத் தொழில்நுட்பம், உலகிலேயே முதன்முறையாக உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பயனர்களின் சாதனங்களில் உள்ள உரையாடல்களில் ஏமாற்று வேலைகளும் தென்படும்போது, உடனுக்குடன் எச்சரிக்கை செய்தி திரையில் தோன்றும். ஏதேனும் தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ மற்றவர்களுக்கு அனுப்பும் முன், பயனர்கள் சிறிது நேரம் நிதானித்துச் சிந்திக்குமாறு அந்த எச்சரிக்கை செய்தி வலியுறுத்தும்.

சிங்கப்பூரில் 2019ஆம் ஆண்டிலிருந்து மோசடிகளால் $4 பில்லியனுக்கும் அதிகமான பணம் இழக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் ஏறத்தாழ $410.6 மில்லியன் தொகையைச் சிங்கப்பூர் மக்கள் மோசடிக்காரர்களிடம் இழந்துள்ளனர்.

மின்னியல் வர்த்தகம், கடன்/முதலீட்டு மோசடிகள், வேலைவாய்ப்பு மோசடிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள்போல் ஆள்மாறாட்டம் செய்து செய்யப்படும் போலித் தொலைபேசி அழைப்புகள்/செய்திகள் ஆகியவை மிகவும் பொதுவான மோசடி வகைகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதேவேளையில், புதன்கிழமையன்று (அக்டோபர் 14) வெளியிட்ட அறிவிப்பில், தனது அதிநவீன பாதுகாப்புத் கருவிகளுக்கான அணுகலைச் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு வழங்கப்போவதாக கூகல் அறிவித்துள்ளது.

இதன் மூலம் இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் கணினி அமைப்புகளில் உள்ள குறைபாடுகளையும் பாதிப்புகளையும் சில நிமிடங்களிலேயே கண்டறிந்து, உறுதிசெய்து, சரிசெய்ய முடியும்.

இந்தச் செயற்கை நுண்ணறிவு மாதிரி பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களையோ தகவல்களையோ சாதனத்தைவிட்டு வெளியே அனுப்பாமல், அறியப்பட்ட மோசடிகளிலிருந்து முழுமையான பாதுகாப்பை அளிப்பதாக உறுதி அளிக்கிறது.

காவ்டெக் அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரத்தின் ஒரு பகுதியாக புதன்கிழமையன்று முறைப்படி அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்