இன்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல்துறை கடந்த 2022ஆம் ஆண்டு வெளியிட்ட காணொளியில் தாய்லாந்தின் தேசிய பூங்கா துறையைச் சேர்ந்த கிட்டிச்சாய் ருங்லாய்பூன்வோங் என்பவர் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்கட்டைகளுக்கு மத்தியில் நடந்து செல்வதைக் காணலாம்.
ஒரு கிலோகிராம் எடையுள்ள மரக்கட்டையின் விலை அமெரிக்க டாலர் 290க்கு (S$380) விலைபோகக்கூடிய நிலையில், 59 கிலோகிராம் எடையுள்ள மரக்கட்டைகள் அடங்கிய தொகுப்பு அமெரிக்க டாலர் 14,500ஐ ஈட்டித்தரவல்லது.
மேற்கூறிய குற்றச்செயலில் கிடைத்திருக்கக்கூடிய கள்ளப் பணம் நல்ல பணமாக மாற்றம் கண்டிருக்கலாமா என்பது குறித்து அந்தக் காணொளியில் தகவல் இல்லை.
ஆனால், சிங்கப்பூர் வழியாக கள்ளப் பணம் செல்லுமானால் விரைவில் அது குறித்து விசாரணை மேற்கொள்ள சிங்கப்பூருக்கு அதிகாரம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில், ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள், கனிமவளத் திருட்டு போன்ற பரந்த அளவிலான சுற்றுச்சூழல் தொடர்பான குற்றங்களின் மூலம் கிடைக்கும் லாபம் குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணை நடத்த முடியும்.
இதன்மூலம் அதிகாரிகளுக்கு பரந்த அளவிலான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் சுற்றுச்சூழல் குற்றங்களின் தொடர்பான விசாரணையை, அந்தக் குற்றச்செயல்கள் வனவிலங்குகள் கடத்தல் போன்ற சிங்கப்பூர் சட்டங்களில் வரையறுக்கப்பட்ட கடுமையான குற்றங்களாக இருந்தால் மட்டுமே, மேற்கொள்ளும் அதிகாரம் இருந்தது.
புதிய சட்டங்கள் கொண்டுவரக் காரணமென்ன என்ற கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சு: “அனைத்துலக சமூகத்தின் பொறுப்புள்ள நாடாக விளங்க இந்த உலகளாவிய பிரச்சினையைத் தீர்க்க நாமும் நமது பங்கை ஆற்ற வேண்டும். தற்போது கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் இதைச் செய்ய உதவும்,” என்று விளக்கியது.