புதிய மின்சிகரெட் தடுப்புச் சட்டங்கள்: தெளிவு கோரும் ‘ஸ்டோரேஜ்’ நிறுவனங்கள்

புதிய மின்சிகரெட் தடுப்புச் சட்டங்கள்: தெளிவு கோரும் ‘ஸ்டோரேஜ்’ நிறுவனங்கள்

2 mins read
d3f4a7ff-e8bd-4c43-9435-2214f5617ae3
புதிய சட்டங்களின் தொடர்பில் தங்களுக்குக் கூடுதல் தெளிவு வேண்டும் என்று ஸ்ரடோரேஜ் வசதிகளை வழங்குவோர் கேட்டுக்கொள்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொருள்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் (ஸ்ரடோரேஜ்) வசதியை வழங்கும் நிறுவனங்கள் (storage providers), பொதுவாக தங்கள் சேவைகளைப் பயன்படுத்துவோரிடம் அடிப்படை சோதனை நடத்துவதுண்டு என்றும் சந்தேகம் தரும் வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளன.

லாக் அண்ட் ஸ்டோர், ஸ்டோர்ஃபிரெண்ட்லி, ஸ்பேஸ்ஹப் போன்றவை இச்சேவையை வழங்குகின்றன.

எனினும், மின்சிகரெட்டுகளுக்கு எதிரான புதிய சட்டங்களுக்கு இம்மாதம் ஆறாம் தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்டோரேஜ் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. புகையிலை, மின்சிகரெட் கட்டுப்பாட்டுச் சட்டம் என்ற புதிய சட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்கள் மின்சிகரெட்டுகளை வைக்காமல் இருப்பதைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஸ்டோரேஜ் நிறுவனங்களுக்கு உள்ளது.

அவ்வாறு செய்யாவிடில் முதல்முறை குற்றவாளிகளுக்கு மூவாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் 100,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படக்கூடும். மறுபடியும் குற்றம் புரிவோருக்கான தண்டனை இரட்டிப்பாகலாம்.

மின்சிகரெட் தொடர்பான புதிய சட்டங்கள் வரும் மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் மார்ச் ஆறாம் தேதி தெரிவித்தார். கிடங்குகள், ஸ்டோரேஜ் வசதிகள் ஆகியவற்றில் மின்சிகரெட் தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துமாறு ஸ்டோரேஜ் நிறுவனங்கள், சுகாதார அமைச்சைக் கேட்டுக்கொண்டுள்ளன. தாங்கள் கையாளும் எல்லா பெட்டிகளையும் கலன்களையும் சோதித்துப் பார்க்க இயலாது என்று அவை கவலை தெரிவிக்கின்றன.

இதுபோன்ற சோதனைகளை சுங்கத்துறைதான் மேற்கொள்ளவேண்டும் என்று, ஸ்டோரேஜ் நிறுவனங்களைக் கவனிக்கும் சங்கமான எஸ்எஸ்ஏஏ இம்மாதம் ஒன்பதாம் தேதி, புதிய சட்டங்கள் குறித்த அறிவிப்புக்கு அறிக்கை மூலம் பதிலளித்தது.

சங்கத்தின் தலைவர் ஹெலன் இங், “வாடிக்கையாளர்கள் பொதுவாக தங்கள் உடைமைகளை சீல் போட்டு மூடப்பட்டிருக்கும் கலன்களில் வைப்பர். அதனால் ஒவ்வொரு பெட்டி/கலனின் உள்ள பொருள்களைச் சோதித்துப் பார்க்க முடியாது. ஆகையால் புதிய சட்டங்களை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளை சுங்கத்துறை மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும்,” என்றார்.

இதன் தொடர்பிலான 10-பக்கக் கையேட்டை சுகாதார அறிவியல் ஆணையம், புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட அன்றே அதன் இணையத்தளத்தில் வெளியிட்டது. எனினும், நிபந்தனைகளின் தொடர்பில் மேலும் துல்லியமான விவரங்கள் தேவை என்று ஸ்டோரேஜ் நிறுவனங்கள், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளன.

இதன் தொடர்பில் ஆதரவு தேவைப்படுவோர் HSA_IS@hsa.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்