சிங்கப்பூரில் சைக்கிளோட்டிகளுக்கு உதவும் வகையில் புதிய செயலி ஒன்றை இளையர்கள் உருவாக்கியுள்ளனர்.
‘கியர் அப்’ எனப்படும் அச்செயலி, வானிலை எச்சரிக்கை, பாதுகாப்பான பயண வழி போன்ற பயனுள்ள தகவல்களை வழங்கும்.
24 வயதான ராதாகிருஷ்ணன் ஸ்ரீவர்ஷினி உள்ளிட்ட ஐந்து இளையர்கள் அடங்கிய குழு அச்செயலியை வடிவமைத்துள்ளது.
சிங்கப்பூரின் போக்குவரத்து முறையை மேம்படுத்தும் நோக்கில் 17 முதல் 33 வயதுக்கு உட்பட்ட 35 க்கும் மேற்பட்ட இளையர்கள் மூன்று மாதங்களாக உழைத்து ஏழு திட்டங்களை உருவாக்கினர்.
ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இவை முன்வைக்கப்பட்டன.
போக்குவரத்து, கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் பே யாம் கெங்கிடம் இத்திட்டங்கள் சனிக்கிழமை (செப்டம்பர் 26) சமர்ப்பிக்கப்பட்டன.
உணவு விநியோகிப்பாளர்கள், பொழுதுபோக்குக்காக சைக்கிள் ஓட்டுபவர்கள் என ஆறு வெவ்வேறு தரப்பினரின் தேவைகளை இந்த ‘கியர் அப்’ செயலி பூர்த்திசெய்யக்கூடும்.
இதில் சிறந்த பயண வழிகள், வானிலை நிலவரம், வாகன நிறுத்துமிட வசதி, தடைகள் குறித்த எச்சரிக்கை உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
முதியவர்கள் தன்னிச்சையாகப் பயணம் செய்வதை ஊக்குவிப்பது, பேருந்து நிறுத்தங்களில் வசதிகளை மேம்படுத்துவது, உச்சநேரப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது போன்ற இதர திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.
தேசிய இளையர் மன்றம் மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் ஆதரவோடு போக்குவரத்துக்கான இளையர் குழு 2026 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
சிங்கப்பூர் இளையர் திட்டத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுகிறது.
இந்த இளையர்களின் யோசனைகள் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டம் தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் பே யாம் கெங் தெரிவித்தார்.
பயணிகளின் பல்வேறு தேவைகளைச் சமன் செய்வது போக்குவரத்துத் திட்டமிடலில் உள்ள பெரும் சவால்களில் ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டு, வீட்டு வசதி தொடர்பான மேலும் மூன்று புதிய இளையர் குழுக்களுக்கான பதிவுகளும் தொடங்கியுள்ளன.
