தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலைய ஊழியர்களுக்கு உதவும் புதிய செயலி

2 mins read
‘ஊடுகதிர்ப் படம்’ போன்ற பார்வையைத் தரும்: சிஏஜி
9c37b88a-7d96-48ff-b08b-4be72d5ee0c9
மூன்று ஆண்டுகாலமாக உருவாக்கப்பட்ட ‘ஆக்மென்டெட் அண்டர்கிரவுண்ட் சர்விசஸ் விஷுவலைசர்’ (AUSV) செயலி, டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையக் குழுமப் (CAG) பொறியாளர்கள் அத்தியாவசிய நிலத்தடிச் சேவைகளைத் திறம்படச் செய்ய உதவும் புதிய செயலியை அக்குழுமம் உருவாக்கியுள்ளது.

 ‘ஆக்மென்டெட் அண்டர்கிரவுண்ட் சர்விசஸ் விஷுவலைசர்’ (AUSV) என்பது செயலியின் பெயர்.

மெய்நிகர்த் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இருளிலும் நிலத்தடியைப் ‘பார்த்து’, விமான நிலைய நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தச் செயலி உதவுகிறது.

மூன்று ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ‘ஏயுஎஸ்வி’ செயலி, டிசம்பரில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

டிசம்பர் 16ஆம் தேதி, சாங்கி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அச்செயலியின் அம்சங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

விமான நிலையம் முழுவதும் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருக்கும் கம்பிவடங்கள், குழாய்கள் போன்றவற்றின் முப்பரிமாணப் படத்தை அச்செயலி காட்டும். பொறியாளர்கள் எந்தவோர் இடத்திலும் மேற்பரப்பில் நின்றபடி நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள சேவைகளை மெய்நிகர் முறையில் காண இது உதவுகிறது.

விமான நிலையச் செயல்பாடுகளுக்கான பல்வேறு அத்தியாவசியச் சேவைகள் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ளன.

உயர் மின்னழுத்தக் கம்பிவடங்கள், மோசமான வானிலையின்போது பார்க்கும் தொலைவு தெளிவாகத் தெரியாத நிலையில் விமானிகளுக்கு வழிகாட்டும் விமானத்தள ஒளியூட்டுச் சேவைகள், நீர்க்குழாய்கள், ஓடுபாதையில் அந்நியப் பொருள்களை அடையாளம்காணும் கட்டமைப்புக்கான கம்பிவடங்கள் போன்றவை அவற்றில் அடங்கும்.

இத்தகைய அத்தியாவசியச் சேவைகளின் பராமரிப்பு அல்லது பழுதுபார்ப்புப் பணிகள் பின்னிரவு 1 மணிக்கும் அதிகாலை 5 மணிக்கும் இடையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்நேரத்தில் குறைவான ஒளியிலும் பொறியாளர்கள் சிறப்பாகச் செயல்பட ‘ஏயுஎஸ்வி’ செயலி கைகொடுக்கும்.

இதற்கு முன்னர், விமானத்தளத்தின் இருபரிமாணப் படங்களின் உதவியுடன் பொறியாளர்கள் பணிகளில் ஈடுபட்டனர். விமானக் கட்டுப்பாட்டு அறை, விமான நிலைய முனையத்தின் கட்டடங்கள் போன்றவற்றை அவர்கள் அடையாளமாகக் கொண்டு செயல்பட்டனர்.

நிலத்தடியில் அமைந்திருக்கும் ஆறு பொறியியல் சேவைகளுக்கு அவர்கள் ஆறு வெவ்வேறு வரைபடங்களின் உதவியுடன் செயல்பட நேரிட்டது. அவற்றில் ஒரு சேவைக்கு 8,000க்கும் அதிகமான ஆழ்துளைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஓர் ஆழ்துளையைச் சரியாக அடையாளம் காண்பது மிகவும் சிக்கலான பணி என்பதை ‘சிஏஜி’ சுட்டியது.

புதிய செயலியில் நிலத்தடிக் கட்டமைப்பின் முழுமையான வரைபடம் இன்னும் சேர்க்கப்படவில்லை. சிறப்பு முப்பரிமாணப் படக்கருவியில் பொறியாளர்கள் எடுக்கும் நிலத்தடிக் கட்டமைப்பின் படங்கள் செயலியில் இணைக்கப்படும். அதன்வழி காலப்போக்கில் செயலியின் துல்லியத் தன்மை மேம்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்