மாணவர்கள் பயன்படுத்தும் திறன்சாதனங்களை நிர்வகிப்பதற்கான புதிய செயலியை 2025 ஜனவரிக்குள் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.
எல்லா மாணவர்களின் ‘ஐபேட்’ மற்றும் ‘குரோம்புக்’ கருவிகளிலிருந்து ‘மொபைல் கார்டியன்’ செயலியை கல்வி அமைச்சு நீக்கியதற்குப் பிறகு புதிய செயலியை உருவாக்கும் முயற்சி தொடங்கியது.
இவ்வாண்டு நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் மொபைல் கார்டியன் செயலியுடன் சம்பந்தப்பட்ட குத்தகையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாற்றுத் திறன்சாதன நிர்வாகச் செயலிக்கான (டிஎம்ஏ) தெரிவுகளையும் புதிய கல்வி ஆண்டிற்குள் அந்தச் செயலியை அறிமுகம் செய்வது குறித்தும் தமது அமைச்சு ஆராய்வதாக அவர் கூறினார்.
ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த இணையப் பாதுகாப்பு மீதான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 13,000 திறன்சாதனங்களில் ஏறக்குறைய ஆறில் ஒரு சாதனம் ஒருசில தரவுகளை இழந்ததாக திரு சான் கூறினார்.
ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவானவர்களால் இழந்த தரவுகள் அனைத்தையும் மீட்க இயலவில்லை என்றும் தரவுகள் முன்கூட்டியே பிரதி எடுக்கப்படாத சாதனங்கள் தொடர்பானவை அவை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையே, சில ஐயங்களுக்கு விளக்கமளித்த கல்வி அமைச்சு, மொபைல் கார்டியனின் சேவைகள் 2024 ஆகஸ்ட் இறுதியில் நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திறன்சாதனப் பயன்பாட்டை நிர்வகிக்கவும், திரைநேரத்தைக் கட்டுப்படுத்தவும், குறிப்பிட்ட இணையத்தளங்கள், செயலிகளை அணுகாமல் தடுக்கவும் மொபைல் கார்டியன் செயலி பயன்படுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் நிகழ்ந்த, மொபைல் கார்டியன் சம்பந்தப்பட்ட இணையப் பாதுகாப்பு மீறல் சம்பவங்கள் தொடர்பில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திரு சான் பதிலளித்தார்.
அந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து கற்றல், கற்பித்தலுக்கான தொழில்நுட்பத்தை அமைச்சு பயன்படுத்துவது தொடர்பாகவும் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் வரை மாணவர்களின் சாதனங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதையும் அவை பொறுப்பான முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும் உறுதிசெய்ய பள்ளிகளில் கூடுதல் நடைமுறைகள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
இணையப் பாதுகாப்பு மீதான தாக்குதலால், உலகளவில் ‘மொபைல் கார்டியன்’ செயலியை நிறுவியிருந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், சிங்கப்பூரின் 26 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 13,000 மாணவர்களும் அடங்குவர் என்று ஆகஸ்ட் 5ஆம் தேதி கல்வி அமைச்சு கூறியது.

