சமூகப் பங்களிப்பை விரும்பும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க புதிய அணுகுமுறை

எதிர்காலப் பொருளியல் மாநாட்டில் அறிமுகம் கண்ட ‘தொண்டூழிய ஆதரவு’ அணுகுமுறை

சமூகப் பங்களிப்பை விரும்பும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க புதிய அணுகுமுறை

2 mins read
58e1c6d6-350f-42a1-ab04-ee5631086758
எதிர்காலப் பொருளியல் மாநாட்டில் புதிய தொண்டூழிய ஆதரவு அணுகுமுறையை அறிமுகம் செய்த கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ (நடுவில்). சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவர் ஜேனெட் ஆங் (இடது) உடன் உள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிறுவனங்கள் தங்களது நேரத்தையும் திறனையும் வழங்கி சமூகத்திற்குத் தொண்டாற்றுவதை எளிதாகவும் அதிக தாக்கம் கொண்டதாகவும் மாற்றும் வகையில் ‘வோலென்டியர்இங்க்.’ (VolunteerInc.) எனும் அணுகுமுறை அறிமுகம் கண்டுள்ளது.

இது, வணிக நிறுவனங்களின் அளவு, ஆர்வம், திறன் ஆகியவற்றுக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட பொருத்தமான தொண்டூழிய வாய்ப்புகளுடன் இணைக்கும்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்துடன் இணைந்து இந்த அணுகுமுறையை அறிமுகம் செய்துள்ளது.

வியாழக்கிழமை (மே 14) நடைபெற்ற எதிர்காலப் பொருளியல் மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ இதை அறிமுகம் செய்தார்.

கடந்த ஒன்பது மாதங்களில், 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 500 ஊழியர்கள் சமூகத்திற்குப் பங்களித்த நிலையில், மேலும் 120 நிறுவனங்கள் தொண்டூழியம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்த அணுகுமுறை, 2030ஆம் ஆண்டிற்குள் 600 வணிக நிறுவனங்களை ஈடுபடுத்தி, 6,000 ஊழியர்களைச் சமூகத்திற்குப் பங்களிக்கச் செய்யும் இலக்கைக் கொண்டுள்ளது.

இந்த அணுகுமுறையைத் தொடங்கிவைத்துப் பேசிய கல்வி மூத்த துணை அமைச்சருமான திரு நியோ, மாறிவரும் உலகில் வேலை நிலைத்தன்மை குறித்த ஊழியர்களின் அச்சத்தைக் கோடிட்டுக் காட்டினார்.

ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் செயற்கை நுண்ணறிவு உத்தியை வடிவமைக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

“தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைத் தாண்டி, ஊழியர்களின் மேம்பாட்டிலும் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்,” என்றார் அவர்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, ஊழியர் மேம்பாடு ஆகியவற்றுடன் நிறுவனங்கள், சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதன் மூலம் ஒரு வலுவான சமூகக் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு கலை, மரபுடைமைப் புரவலர்களாக 579 நிறுவனங்கள், தனிநபர்கள் அங்கீகரிக்கப்பட்டதைச் சுட்டிய அவர், விளையாட்டுத் துறையிலும் நிதியுதவியைத் தாண்டி, விளையாட்டு வீரர்களுக்கு முழு ஆதரவை வழங்குவதையும் சுட்டினார்.

தேசியத் தொண்டூழியர், கொடையாளர் நிலையம் நடத்திய ஆய்வில், 30 விழுக்காட்டு நிறுவனங்கள் தொண்டூழியம், நன்கொடைகள் மூலம் சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பது கண்டறியப்பட்டது.

சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் நடத்திய சமூக நிலைத்தன்மை குறித்த ஆய்வில், 90 விழுக்காட்டு நிறுவனங்கள் சமூக நிலைத்தன்மையை முக்கியமானதாகக் கருதுவது தெரியவந்தது.

இவ்விரண்டுக்குமான இடைவெளி, பல நிறுவனங்கள் பங்களிக்க விரும்புவதையும் சில காரணங்களால் அதற்குத் தடங்கல் ஏற்படுவதையும் காட்டுவதாக அமைச்சர் நியோ சொன்னார்.

இதற்காக அரசாங்க ஆதரவுடன் இப்புதிய அணுகுமுறையும் அறிமுகம் கண்டுள்ளதை அவர் சுட்டினார்.

“நல்ல நோக்கம் கொண்ட வணிகங்கள், சிங்கப்பூரின் ‘நாம் முதலில்’ எனும் கொள்கைக்குப் பங்களிப்பதுடன், வணிகங்கள் செழித்தோங்குவதற்கான சூழலையும் ஏற்படுத்தித் தருகின்றன,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்