சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் புத்தாண்டு நாளில் கூடுதல் மகிழ்ச்சி. ஜனவரி 1ஆம் தேதி, அங்குள்ள அரிய வகை இலங்கைச் சிறுத்தை (Sri Lankan leopard) மூன்று குட்டிகளை ஈன்றது.
புதிதாகப் பிறந்த அவற்றையும் சேர்த்து மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் இவ்வகைச் சிறுத்தைகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
இதற்குமுன் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் 1997ஆம் ஆண்டு இந்த வகைச் சிறுத்தை குட்டியை ஈன்றது. தற்போது பிறந்துள்ள குட்டிகளும் அவற்றின் தாயும் இன்னும் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்படவில்லை என்று காப்பகம், வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளது.
அசான்கா எனும் ஆண் சிறுத்தைக்கும் யாலா எனும் பெண் சிறுத்தைக்கும் முதல்முறை பிறந்துள்ள குட்டிகள் இவை என்று தெரிவிக்கப்பட்டது.
உலகெங்கும் காடுகளில் வாழும் இலங்கைச் சிறுத்தைகளின் எண்ணிக்கை 800க்கும் குறைவு என்றும் அவை மான், காட்டுப் பன்றி போன்றவற்றை வேட்டையாடும் என்றும் தெரிகிறது.
காடுகளில் 10 முதல் 12 ஆண்டுகள் வாழும் இவ்வகைச் சிறுத்தைகள் காப்பகங்களில் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை என்று தகவல்கள் கூறுகின்றன. இரவிலும் பகலிலும் கூர்மையான பார்வைத் திறன் பெற்றுள்ள இவற்றின் தோல் அமைப்பு, சட்டவிரோதமாக வேட்டையாடுவோரிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது.

