சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) சேரும் இளநிலை, முதுநிலைப் பட்டக்கல்வி மாணவர்கள் இனி செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய பட்டக்கல்விப் பாடத்திட்டங்களை மேற்கொள்ளலாம்.
புதிய 2025 கல்வியாண்டில் தேசிய பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு இது பொருந்தும்.
என்யுஎஸ் கணினியியல் பள்ளி, கணினி இளநிலைப் பட்டக்கல்விப் பாடத் திட்டத்தை வழங்கும். அப்பாடத் திட்டத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வேலை வாய்ப்புகளுக்குத் தயார்ப்படுத்தப்படுவர் என்று என்யுஎஸ் தலைவர் டான் எங் சை செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 21) தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையைத் தகுந்த விதிமுறைகள், வழிமுறைகள் மூலம் கையாள்வது போன்ற அம்சங்களின் தொடர்பிலும் மாணவர்கள் கற்றுக்கொள்வர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது என்யுஎஸ் கணினியியல் பள்ளி, தகவல் முறைகள் (Information Systems programme) இளநிலைப் பட்டக் கல்வியை வழங்குகிறது. இனி அது, வர்த்தக செயற்கை நுண்ணறிவு முறைகள் இளநிலைப் பட்டக்கல்வியாக மாற்றியமைக்கப்படும் என்றும் பேராசிரியர் டான் தெரிவித்தார்.
அந்தப் பாடம், வர்த்தகங்களும் அமைப்புகளும் சம்பந்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று அவர் சொன்னார்.
முதுநிலைப் பட்டக்கல்வி மாணவர்கள், புதிய செயற்கை நுண்ணறிவு கணினிப் பாட முதுநிலைப் பட்டக்கல்விப் பாடத் திட்டத்தை மேற்கொள்ளலாம். அதிநவீன செயற்னை நுண்ணறிவு அம்சங்கள் உள்ளிட்டவை அப்பாடத் திட்டத்தில் கற்றுத் தரப்படும் என்றும் அவர் விளக்கினார்.
என்யுஎஸ்ஸின் கணினிப் பாடப் பள்ளியின் புதிய கட்டடங்களின் அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியில் பேராசிரியர் டான் பேசினார். ‘சீ பில்டிங்’, ‘சீ கனெக்ட்’ என்ற அந்த இரு கட்டடங்கள் 2022, 2023ஆம் ஆண்டுகளில் திறக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்ப நிறுவனமான ‘சீ’ அக்கட்டடங்களை அமைக்க நிதியுதவி வழங்கியது. ‘சீ’, கணினியியல் பாடம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள 2021ஆம் ஆண்டு என்யுஎஸ்ஸுக்கு 50 மில்லியன் வெள்ளி நன்கொடை அளித்தது.
திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் சான் சுன் சிங், ‘சீ’க்கும் என்யுஎஸ்ஸுக்கும் இடையிலான பங்காளித்துவம், நன்கொடை வழங்கப்பட்டதையும் தாண்டி சிங்கப்பூரின் போட்டித்தன்மையை உருவெடுக்கக்செய்யும் அம்சமாக விளங்கமுடியும் என்றார்.
என்யுஎஸ் கணினிப் பாடப் பள்ளியில் தற்போது 6,000 இளநிலைப் பட்டக்கல்வி மாணவர்களும் 2,000 முதுநிலைப் பட்டக்கல்வி மாணவர்களும் பயில்கின்றனர்.

