மேம்பாட்டுப் பணிகளுக்காகப் பெண்டிமியர் பகுதியில் உள்ள மத்திய விரைவுச்சாலையின் வெளிவழி ஒன்று, அக்டோபர், நவம்பர் மாதங்களில் நான்கு நாள்கள் அதிகாலை வேளையில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்.
நகர மறுசீரமைப்பு ஆணையம் வியாழக்கிழமை (அக்டோபர் 15) வெளியிட்ட அறிக்கையில், துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையை இணைக்கும் மத்திய விரைவுச்சாலையின் ‘8ஏ’ வெளிவழி, அக்டோபர் 20, 21, நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12 மணிமுதல் காலை 5 மணிவரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.
பீஷான் முதல் நகர்ப்பகுதி வரையிலான இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொத்தோங் பாசிர், பெண்டிமியர் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் நோக்கில், தீவு விரைவுச்சாலைக்குக் குறுக்கே புதிய நடையர், மிதிவண்டிப் பாலத்தைக் கட்டும் பணிகளுக்காக அந்த வெளிவழி மூடப்படுவதாக ஆணையம் கூறியது.
அப்பாதையைப் பயன்படுத்தி தீவு விரைவுச்சாலைக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், அதற்குப் பதிலாக வெளிவழி ‘7சி’ஐப் பயன்படுத்தி, மோல்மின் சாலை, தாம்சன் சாலை வழியாகத் தீவு விரைவுச்சாலைக்குள் செல்ல வேண்டும்.
வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்ட, தடுப்புகளும் மாற்றுவழிப் பலகைகளும் வைக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. வாகன ஓட்டிகள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, கவனமாக வாகனத்தை ஓட்டுமாறும், வழிகாட்டிப் பலகைகளைப் பின்பற்றுமாறும் அது அறிவுறுத்தியது.
இதற்கு முன்னதாக, நடையர், மிதிவண்டிப் பாலத்தைக் கட்டும் பணிகளுக்காக, அந்த வெளிவழி மே, ஜூன், ஜூலை மாதங்களில் சில நாள்களுக்கு மூடப்பட்டிருந்தது.
