இணையத் துன்புறுத்தலுக்கு ஆளாவோர், இழப்பீடு கோர வகைசெய்யும் புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (நவம்பர் 5) விவாதிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட இணையத்தளங்கள், அவற்றை நிர்வகிப்போர், தகவல் தொடர்பாளர்களுக்கு எதிராக இழப்பீடுகளைக் கோருவதற்கு அம்மசோதா வழிவகுக்கக்கூடும்.
ஊதிய அல்லது லாப இழப்பீடுகள் முதலியவை அவற்றுள் அடங்கும். தவறிழைப்போர் அனுகூலங்களைப் பெற அனுமதிக்கக்கூடாது என்பது நோக்கம். இணையப் பாதுகாப்பு (உதவி, பொறுப்பு) மசோதாவின்கீழ் வரும் கட்டமைப்பில் அந்தத் தீர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
“மசோதாவின் முக்கிய நோக்கம் பாதிக்கப்பட்டோரின் நிலையை வலுவாக்குதல்,” என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.
“சிலவகைத் துன்புறுத்தல்களின்போது, பாதிக்கப்பட்டோர் பெறும் ஊதியம் அல்லது வாழ்வாதாரம் சிக்கலுக்கு உள்ளாகக்கூடும். அவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்,” என்றார் இரண்டாம் உள்துறை அமைச்சருமான திரு டோங்.
“இணையத்தில் அந்தரங்கப் படங்களை விற்பனைக்கு விடுவதைப் போன்ற சம்பவங்களில், குற்றவாளிகள் லாபம் ஈட்டக்கூடும். அத்தகைய சம்பவங்களில், அவர்கள் அதனைக் கொடுக்கவேண்டும் என உத்தரவிடப்படும். அதனால் தவறிழைப்பவர்கள் அனுகூலங்களைப் பெறமுடியாமல் போகும்,” என்றார் அவர்.
அந்தரங்கப் படங்களைப் பயன்படுத்துதல், படங்களின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்துதல், இணையத்தில் ஆள்மாறாட்டம் முதலியவை அந்தச் சம்பவங்களில் அடங்கும்.
ஒத்துழைக்க மறுக்கும் இணையத்தள நிர்வாகிகளும் தொடர்பாளர்களும்கூட புதிய கட்டமைப்பின்கீழ் கூடுதல் இழப்பீட்டைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இணையத் துன்புறுத்தலை நிறுத்த மறுத்தால் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் இழப்பீடு வழங்கப்படலாம்; குற்றம் புரிவோருக்கு அபராதமும் விதிக்கப்படக்கூடும் என்றார் திரு டோங்.
1960களில் மோட்டார்வாகனப் பாதுகாப்புச் சட்டங்கள் அறிமுகம் கண்டன. அதன் பின்னர், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வாகனங்கள் வடிவமைக்கப்பட்ட விதம் மாறியது. அதைப் போன்றே புதிய மசோதா, இணையத்தில் பயனீட்டாளர்களும் தளங்களும் நடந்துகொள்வதற்கான சரியான கோட்பாடுகளை வரையறுக்கும் என்று அமைச்சர் டோங் கூறினார்.
இணையத்தில் குற்றவாளிகள் பெயரை வெளிப்படுத்தாமல் செயல்படுவதைப் புதிய மசோதா எவ்வாறு தடுக்கும் என்பதையும் அவர் விளக்கினார். இன்றைய நிலையில், குற்றவாளிகளின் அடையாளம் குறித்த தகவல்களைப் பெறுவதற்குப் பாதிக்கப்பட்டோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டியுள்ளது. அதற்கு அதிகச் செலவாகும், நேரம் எடுக்கும்.
அரசாங்கத்தின் புதிய அமைப்பான இணையப் பாதுகாப்பு ஆணையம் தளங்களிடமிருந்து அடையாளத் தகவல்களைப் பெறுவதற்கு அதிகாரம் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்பதற்காகக் குற்றவாளிகளின் அடையாள விவரங்களும் அவர்களிடம் கொடுக்கப்படலாம் என்றார் திரு டோங்.

