கல்லீரல் புற்றுநோய் அபாயத்தைக் கண்டறிய புதிய ரத்தப் பரிசோதனை

கல்லீரல் புற்றுநோய் அபாயத்தைக் கண்டறிய புதிய ரத்தப் பரிசோதனை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Oct 2026 - 4:59 pm

2 mins read

சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரத்தப் பரிசோதனை ஒன்று, கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தீவிர பாதிப்பு ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே கண்டறிய உதவக்கூடும்.

‘சிர்ஹோகிளியர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஊடுருவலற்ற பரிசோதனை முறை, நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படுவதற்கு முன்னரே கல்லீரல் சிரோசிஸ் எனும் கடுமையான நோய் ஏற்படும் அபாயத்தை அடையாளம் காணும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் உயிரித்தொழில்நுட்ப நிறுவனமான ‘மிர்செஸ்’, சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் மையம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள இந்தச் சோதனையானது, நோயாளியின் சாதாரண ரத்த மாதிரியில் உள்ள குறிப்பிட்ட ‘மைக்ரோ ஆர்என்ஏ’ உயிரியல் குறிப்பான்களைப் பகுப்பாய்வு செய்கிறது.

மைக்ரோ ஆர்என்ஏ என்பது மனித உடலின் பல முக்கிய உயிரியல் செயல்பாடுகளில் பங்குபெறும் சிறிய ரிபோநியூக்ளிக் அமில மூலக்கூறுகளைக் குறிப்பதாகும்.

கல்லீரலில் பாதிப்போ அல்லது அழற்சியோ ஏற்படத் தொடங்கும்போது, எச்சரிக்கை அறிகுறிகளைக் குறிப்பிட்ட மைக்ரோ ஆர்என்ஏ மூலக்கூறுகள் வழக்கத்திற்கு மாறான அளவில் ரத்தத்தில் கலக்கின்றன.

சிர்ஹோகிளியர் பரிசோதனை இந்த மூலக்கூறுகளின் கூட்டு அளவைத் துல்லியமாகக் கணக்கிடுகிறது. 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்காக உருவாக்கப்பட்ட இப்பரிசோதனை, தனியுரிமை வழிமுறை ஒன்றின் மூலம் கல்லீரல் சிரோசிஸ் நோய் அபாயத்தை அதிகம், நடுத்தரம் அல்லது குறைவு என வகைப்படுத்துகிறது.

மருத்துவ மதிப்பீட்டு ஆய்வுகளில், கல்லீரல் சிரோசிஸ் நோய் ஏற்படும் அபாயத்தை இப்பரிசோதனையில் மிகத் துல்லியமாகக் கண்டறியும் சாத்தியம் மிக அதிகம் (89 விழுக்காடு).

அதே வேளையில், இந்நோய்ப் பாதிப்பு இல்லாதவர்களை 95 விழுக்காடு துல்லியத்துடன் உறுதிசெய்துள்ளது. கொழுப்பு கல்லீரல் நோய், நாள்பட்ட கல்லீரல் அழற்சி அல்லது மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு போன்ற அதிக அபாயச் சூழலில் உள்ளவர்களிடம் கல்லீரல் சிரோசிஸ் நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிய மருத்துவர்களுக்கு இப்பரிசோதனை பேருதவியாக இருக்கும்.

கல்லீரல் சிரோசிஸ் நோய் என்பது கல்லீரல் சுருங்கி, தழும்புகள் நிறைந்து, கடினமாகி அதன் செயல்பாடுகள் செயலிழக்கத் தொடங்கும் ஒரு தீவிர நிலையாகும்.

கொழுப்பு கல்லீரல் நோய், அளவுக்கு மிஞ்சிய மதுப் பழக்கம் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே கல்லீரலைத் தாக்கும் தன்னுடல் தாக்கு நோய் போன்ற பல்வேறு காரணங்களால் கல்லீரலுக்கு ஏற்படும் தொடர் பாதிப்புகளால் இந்நோய் உண்டாகிறது.

கல்லீரல் சிரோசிஸ் நோயை முழுமையாகப் பழைய நிலைக்கு மாற்ற இயலாது என்றாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும் அறிகுறிகளைச் சமாளிக்கவும் முடியும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்