1988ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் இருநூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அந்நாட்டிற்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டபோது, அப்போதைய பிரதமர் லீ குவான் யூ, 100 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் இருக்குமா என்று யோசித்தார்.
“இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் இந்தத் தீவு இன்னும் அங்கே இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் சிட்னியில் ஆற்றிய உரையில் கூறினார்.
இந்த நாடு இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்து இருக்குமா என்ற கேள்விதான், செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு புதிய நூலின் அடிப்படையாகும். இது அரசதந்திரம், வீடமைப்பு, கல்வி, தற்காப்பு போன்ற துறைகளில் திரு லீயின் முக்கிய கொள்கைகளை எடுத்துக்காட்டுகிறது.
‘சிங்கப்பூர் இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் இருக்குமா?’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த நூல், சிங்கப்பூரின் முதலாவது பிரதமரின் 100வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சீனப் பதிப்பை அடிப்படையாகக் கொண்டது.
நூல் வெளியீட்டு விழாவில் பேசிய கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, அமரர் லீயின் இந்தக் கேள்வி, நாட்டின் உயிர்வாழ்வுக்கு ஒருபோதும் உத்தரவாதம் இல்லை என்பதையும், ஒவ்வொரு தலைமுறையும் அதைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் சிங்கப்பூரர்களுக்கு நினைவூட்டுவதாக உள்ளது என்றார்.
அப்படியிருக்க, திரு லீ வலியுறுத்திய இன நல்லிணக்கம், ஊழல் எதிர்ப்பு, தகுதிக்கு முன்னுரிமை போன்ற அடிப்படைக் கொள்கைகள், வெகுகாலம் கடந்தும் பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதை இந்த நூல் காட்டுகிறது.
“நாம் சமாளிக்க வேண்டிய சவால்கள் மற்றும் முடிவு கட்ட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் திரு லீ குவான் யூவின் முக்கிய, பசுமையான கொள்கைகள் நம்மை வழிநடத்துவதால், சிங்கப்பூர் ஒரு நல்ல நிலையில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அமைச்சர் சொன்னார்.
லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், தொழிலதிபர் வீ ஹோங் லியோங், நூலின் 4,000 பிரதிகளைக் கல்வி அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த நூலை மஹா யூ யி, பாப்புலர் புத்தகக் கடை, கிராஸ்ரூட்ஸ் புத்தகக் கடை, யூனியன் புத்தகக் கடை, குனோகுனியா மற்றும் தி ஸால் புத்தகக் கடை ஆகியவற்றில் வாங்கிக் கொள்ளலாம். https://www.a-smart.sg/LKY-booksales எனும் இணையப் பக்கம் வழியாகவும் பதிவுசெய்து வாங்கலாம்.