புவாங்கோக்கில் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் தேதி புதிய பேருந்து சந்திப்பு நிலையம் திறக்கப்படவுள்ளது.
இதனால் அங்கு வசிப்பவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு இனி இடையூறு இன்றிச் செல்லலாம்.
எஸ்பிஎஸ் டிரான்சிட் போக்குவரத்து நிறுவனத்தால் நடத்தப்படும் இந்தப் பேருந்து சந்திப்பு நிலையம் புவாங்கோக் எம்ஆர்டி நிலையம், செங்காங் கிராண்ட் மால் என்ற கடைத்தொகுதி ஆகியவற்றுடன் இணைக்கப்படும்.
இந்தப் பேருந்து சந்திப்பு நிலையத்தில் முதலில் பேருந்து சேவை எண் 110, 114, 156 ஆகியவை செயல்படத் தொடங்கும். இவை செங்காங் ஈஸ்ட் அவென்யூ, ஆங்கர்வேல் ஆகிய பகுதிகளுக்கு சேவை வழங்கும். பின்னர் படிப்படியாக இங்கிருந்து மொத்தம் ஏழு பேருந்து சேவைகள் செயல்படும்.
சாங்கி விமான நிலையத்துக்கு சேவை வழங்கும் எண் 110 கொம்பஸ்வேல் பேருந்து சந்திப்பு நிலையத்திலிருந்து புவாங்கோக் பேருந்து நிலையத்துக்கு மாறும். அத்துடன், அந்த சேவை எண்ணுடைய பேருந்துகள் கொம்பஸ்வேல் சாலையில் உள்ள இரு பேருந்து நிறுத்தங்களில் நிற்காது.
கொம்பஸ்வேல் பேருந்து சந்திப்பு நிலையத்தில் செயல்படும் பேருந்து சேவை எண் 374, செங்காங் பேருந்து சந்திப்பு நிலையத்திற்கு மாற்றிவிடப்படும். இதனையடுத்து, இனிமேல் கொம்பஸ்வேல் பேருந்து சந்திப்பு நிலையம் இனி செயல்படாது.
இந்நிலையில், தற்பொழுது புவாங்கோக் எம்ஆர்டி நிலையத்திலிருந்து செயல்படும் பேருந்து சேவை எண் 114, டிசம்பர் 1லிருந்து புவாங்கோக் பேருந்து சந்திப்பு நிலையத்திலிருந்து ஐந்து நிமிடம் முன்கூட்டியே காலை 5.55 மணிக்குத் தனது சேவையைத் தொடங்கும்.
புவாங்கோக் பேருந்து நிலையத்திலிருந்து சேவையைத் தொடங்கும் பேருந்து சேவை எண் 156 செங்காங் ஈஸ்ட் அவென்யூ 1ல் மேலும் இரண்டு பேருந்து நிறுத்தங்களில் நிற்கும். ஆனால், செங்காங் ஈஸ்ட் ரோடு, செங்காங் ஈஸ்ட் வே, கொம்பஸ்வேல் சாலை ஆகிய இடங்களில் உள்ள ஏழு பேருந்து நிறுத்தங்களில் சேவை எண் 156 நிற்காது என்று தெரிவிக்கப்படுகிறது.