ஒவ்வொரு குடும்பத்திலும் தாத்தா பாட்டி முக்கியப் பங்காற்றுபவர்கள். அவர்களுடன் நேரம் செலவிடும்போது குடும்ப பண்புகள், மரியாதை, அன்பு, ஆதரவு போன்ற முக்கிய நன்னெறிகளை நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.
வாழ்வில் வெவ்வேறு கட்டங்களில் தாத்தாவும் பாட்டியும் நம்முடன் பயணித்து அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை நம்மிடம் நினைவுகூர்வர்.
பரபரப்பான வாழ்க்கைச் சூழலிலும் நாம் அவர்களோடு நேரத்தைச் செலவிட வேண்டும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் இரண்டாம் சுகாதார அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி கேட்டுக்கொண்டார்.
குடும்பத்தில் இருக்கும் தாத்தா, பாட்டியைச் சிறப்பிக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘நம் தாத்தா பாட்டியைக் கொண்டாடுவோம்’ எனும் வருடாந்தர இயக்கத்தை தொடக்கி வைத்தபோது அமைச்சர் மசகோஸ் இவ்வாறு தெரிவித்தார்.
சமூகத்தையும், இயற்கையையும் ஒன்றிணைக்கும் விதமாக ‘மண்டாய் இஸ் வைல்ட் அபௌட் எஸ்ஜி’ எனும் புதிய திட்டத்தோடு இணைந்து தொடங்கப்பட்ட அந்த இயக்கத்தின் தொடக்க விழாவில் அமைச்சர் மசகோஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சனிக்கிழமை பிற்பகல் பறவைகள் மகிழ்வன (Bird paradise) வளாகத்தில் இடம்பெற்ற தொடக்க விழாவுக்கு, ‘வாழ்வுக்காக குடும்பங்கள்’ அமைப்பும் மண்டாய் வனவிலங்குக் காப்பகமும் ஏற்பாடு செய்திருந்தன.
தொடக்க விழா இடம்பெற்ற வேளையில் வாழ்வுக்காக குடும்பங்கள் மற்றும் மண்டாய் வனவிலங்குக் குழுமம் முதல் முறையாக குடும்பங்கள் அவர்களின் தாத்தா பாட்டியோடு பறவைகள் மகிழ்வனத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தன.
அதில் 1,000க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு, திரையிடலைக் கண்டு மகிழ்ந்தனர்.
‘நம் தாத்தா பாட்டியை கொண்டாடுவோம்’ இயக்கம் இம்மாதம் முழுவதும் பறவைகள் மகிழ்வனத்தில் கொண்டாடப்படும்.
தொடர்புடைய செய்திகள்
மூன்று தலைமுறைக் குடும்ப உறுப்பினர்கள் கொண்ட டான் குடும்பத்தினர் முதல் முறையாக அச்சுற்றுலாத் தலத்திற்கு வந்திருந்தனர். குடும்பத்தில் இருக்கும் மூன்று பேத்திகளைப் பொறுத்தவரை, அவரவர் தாத்தா பாட்டிகளோடு நேரம் செலவிடுவது இக்காலத்துக்கு மிக அவசியம். தாத்தா பாட்டியரிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் மூவரும் பகிர்ந்துகொண்டனர். ‘மண்டாய் இஸ் வைல்ட் அபௌட் எஸ்ஜி’ திட்டத்தின் முக்கிய அங்கமாக பறவைகள் மகிழ்வனத்தைச் சுற்றிப் பார்க்க வாங்கப்படும் ஒவ்வொரு பெரியவர் பிரிவு நுழைவுச்சீட்டுக்கும் ஒரு இலவச மூத்தோர் நுழைவுச்சீட்டு வழங்கப்படும். இச்சலுகை இம்மாதம் 27 ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.
கூடுதல் விவரங்களுக்கு https://familiesforlife.sg/pages/homepage, https://familiesforlife.sg/pages/programme/triple-p-grandparents, https://www.mandai.com/en/mandai-is-wild-about-sg.html ஆகிய இணையத்தளங்களை நாடலாம்.

