‘பிளெக்சார்’ புதிய கார் பகிர்வுச் சேவை தொடக்கம்

200 கார்கள், 100 இடங்களில் கார்களைப் பெறும் வசதி

‘பிளெக்சார்’ புதிய கார் பகிர்வுச் சேவை தொடக்கம்

2 mins read
051d40e5-1c6f-467a-905b-5451fb492dd3
சிங்கப்பூரில் ‘ப்ளெக்ஸார்’ (Flexar) எனும் புதிய கார் பகிர்வுச் சேவை 200க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் தொடங்கப்பட்டுள்ளது.  - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரில் ‘ஃப்ளெக்ஸார்’ (Flexar) எனும் புதிய கார் பகிர்வுச் சேவை திங்கட்கிழமை (மே 4) அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.

200க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், ஓரிடத்தில் வாகனத்தைப் பெற்றுக்கொண்டு, தங்கள் பயணத்தை முடித்தபிறகு மற்றொரு இடத்தில் அதனைத் திருப்பி ஒப்படைக்கலாம்.

தீவு முழுவதும் ஏறக்குறைய 100 இடங்களில் இதற்கான வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பொங்கோல், செங்காங், ஹவ்காங், தெம்பனிஸ், அங் மோ கியோ, தோ பாயோ போன்ற குடியிருப்புப் பகுதிகளில் இவை அமைந்துள்ளன.

டான் டோக் செங் மருத்துவமனை, ராஃபிள்ஸ் மருத்துவமனை, சில முன்னணி ஹோட்டல்களிலும் ஃப்ளெக்ஸார் வாகனங்களைப் பெற முடியும்.

ஃப்ளெக்ஸார் மின்சார வாகனங்கள், பெட்ரோல் வாகனங்கள் என இரண்டையுமே வழங்குகிறது. 18 வயது நிறைவுபெற்ற முறையான ஓட்டுநர் உரிமம் கொண்டவர் ‘சிங்பாஸ்’ மூலம் தகவல்களைப் பதிவுசெய்து இச்சேவையைப் பயன்படுத்தலாம்.

இச்சேவையைப் பயன்படுத்த உறுப்பியக் கட்டணம் இல்லை. முன்பணமும் கட்டத் தேவையில்லை.

காரை வாடகைக்கு எடுத்த நேரத்தில் விபத்து ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு கொடுக்கவேண்டியிருக்கும். அதனைக் குறைக்கும்பொருட்டு கூடுதல் கட்டணத்தை வாகனத்தை எடுக்கும்போது செலுத்தலாம்.

நிமிட அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல் ஐந்து நிமிடங்களுக்குக் கட்டணம் இல்லை. வாகன வகையைப் பொறுத்து நிமிடத்திற்கு 67 காசுகள் முதல் 74 காசுகள் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயணத்திற்கும் 99 காசுகள் தளக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

வாடகைக்கு எடுக்கும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க, கட்டணம் குறையத் தொடங்கும்.

முதல் 50 கிலோ மீட்டர் பயணம் இலவசம், அதற்கு மேல் ஒரு கிலோ மீட்டர்க்கு 20 காசுகள் வசூலிக்கப்படும்.

பயனீட்டாளர்கள், எரிபொருளை மீண்டும் நிரப்பவோ மின்னூட்டம் செய்யவோ கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதனை ஃப்ளெக்ஸார் நிர்வகித்துக்கொள்ளும்.

குறிப்புச் சொற்கள்