சிங்கப்பூர் நிறுவனமான ஓஷியன் நெட்வொர்க் எக்ஸ்பிரஸ் (ONE), அதன் ஆகப் புதிய கப்பலுக்கு ‘ஒன் சிங்கப்பூர்’ எனப் பெயர் சூட்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) ஜப்பானின் எஹிமே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தக் கப்பலுக்குப் பெயர் சூட்டப்பட்டது.
நிறுவனம் கொள்முதல் செய்யவிருக்கும் 32 மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களில் இது ஆறாவது கப்பல். அவை அனைத்தும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
‘ஓஎன்இ’ நிறுவனம் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கவும் மேற்கொள்ளும் முயற்சியின் ஓர் அங்கமாக அந்தக் கப்பல்களை வாங்குகிறது.
புதிய கப்பல்கள் படிம எரிபொருளுக்கு மாற்றான எரிபொருள்களைப் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்படுகின்றன.
அந்தக் கப்பல்களுக்கான செலவு குறித்த தகவல்களை வெளியிட நிறுவனம் மறுத்துவிட்டது. இருப்பினும் அத்தகைய ஒவ்வொரு கப்பலுக்கும் US$200 முதல் US$225 மில்லியன் வரை செலவாகும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெரெமி நிக்சன் பிசினஸ் டைம்சிடம் கூறினார்.
‘ஓஎன்இ’ நிறுவனம், உலக அளவில் ஆக அதிகக் கப்பல்களைக் கொண்ட ஏழாவது நிறுவனம் ஆகும். அதனிடம் ஏறத்தாழ 260 கப்பல்கள் உள்ளன.
புதிய கப்பல்களையும் சேர்த்து நிறுவனத்தின் மொத்தக் கப்பல்களின் எண்ணிக்கை 290க்குமேல் அதிகரிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கப்பல் பெயர் சூட்டுவிழாவில் பேசிய திரு நிக்சன், “இந்தக் கப்பலுக்குச் சிங்கப்பூரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது, சிங்கப்பூரின் துடிப்புமிக்க கடல்துறை சுற்றுச்சூழலுடன் நிறுவனம் கொண்டுள்ள வலுவான தொடர்பைக் குறிக்கிறது,” என்று கூறினார்.
நிறுவனம் சிங்கப்பூர் தொடர்பில் கொண்டுள்ள வலுவான கடப்பாட்டைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்றார் அவர்.
336 மீட்டர் நீளம் கொண்ட ‘ஒன் சிங்கப்பூர்’ கப்பலில் 13,900 இருபதடிக் கொள்கலன்களை ஏற்ற முடியும்.
இந்த மாதக் (ஜூன்) கடைசியில் அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் அது சேவையைத் தொடங்கும்.