இசை, நாடகம், திரைப்படங்கள் எனக் கலைகள் சார்ந்த விரிவான தொகுப்பையும் சேவைகளையும் கொண்ட மத்தியக் கலை நூலகம் (Central Arts Library) வியாழக்கிழமை (டிசம்பர் 12) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. கலை ஆர்வலர்கள் ஒன்றிணைய, கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும் இடமாக, புதிய மத்தியக் கலை நூலகம் திகழும்.
மத்தியக் கலை நூலகத் திறப்பு நிகழ்ச்சிக்கு தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் வருகை அளித்திருந்தார்.
“மத்தியக் கலை நூலகத்தின் அறிமுகம் உள்ளூர்க் கலைத் துறைக்கு உன்னத அங்கீகாரம் அளிக்கிறது. இதனால் கலைத் துறைக்கு மக்கள் பங்களிப்பும் பெருகும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் திருவாட்டி ரஹாயு.
மூடப்பட்ட ஆர்ச்சர்ட் நூலகம் மற்றும் நூலகம்@எஸ்பிளனேட் வளாகங்களிலிருந்து சேகரித்த கலைத் தொகுப்புகளை, தற்போது மத்தியக் கலை நூலகமாகச் செயல்படும் தேசிய நூலக கட்டடம், தேசிய வடிவமைப்பு நிலையம் என இரண்டு வளாகங்களில் காணலாம்.
தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளில் நூல்கள் மட்டுமின்றி கையெழுத்துப் பிரதிகள் (manuscripts), இசைத்தட்டுகள், ‘டிவிடி’ வட்டுகள் எனப் பல கலை சார்ந்த தொகுப்புகளை பொதுமக்கள் இரவல் பெறலாம்.
குறிப்பாக, இங்குள்ள தமிழ்க் கலைத் தொகுப்பு தற்போது உள்ளூர் மற்றும் அனைத்துலகச் சேகரிப்பு என இரண்டு வகைப்படும் என்று தெரிவித்தார் தேசிய நூலக வாரியத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் லாவண்யா கிருஷ்ணமூர்த்தி.
“மாணவர்கள், கலை ஆர்வலர்கள் எளிதாக, ஒரு மையப்படுத்தப்பட்ட முறையில் கலைத் தொகுப்புகளை அணுக வேண்டும் என்பதே மத்தியக் கலை நூலகத்தின் நோக்கமாகும்,” என்றார் அவர்.
மத்தியக் கலை நூலகம் அளிக்கும் சேவைகளில் இசை ஆர்வலர்களுக்கு ‘பியானோ பயிற்சி’ அறையும் ‘சைலண்ட் ஸ்டூடியோ’ அறையும் உள்ளன. திரைப்படப் பிரியர்கள் கிட்டத்தட்ட 30,000 நடனம், நாடகம், இசை நாடகங்கள், இயக்கப் படங்கள் ஆகியவற்றை நூலக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு வசதியான ‘ஹோம் தியேட்டர்’ அமைப்பில் காணலாம். இந்த அறைகளுக்கு முன்பதிவு கட்டணம் தேவை.
தொடர்புடைய செய்திகள்
மத்தியக் கலை நூலகத்தின் திறப்புவிழாவில் ‘ரெஃப்டுகோ’ (‘RefToGo’) எனும் முன்முயற்சி ஓராண்டுச் சோதனைக்குப் பிறகு அறிமுகம் கண்டுள்ளது. முதல் முறையாக பொதுமக்கள் பொதுக் குறிப்பு சேகரிப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 200,000க்கும் மேற்பட்ட தலைப்புகளை இரவல் வாங்கலாம்.
சிங்கப்பூரின் மையப்பகுதியில் இடம்பெற்றுள்ள மத்தியக் கலை நூலகம், நன்யாங் நுண்கலைக் கழகம், சிங்கப்பூர்க் கலைப்பள்ளி, ‘லாசால்’ கலைக் கல்லூரி மாணவர்களுக்குப் பேருதவியாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.