தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் கோம்பாக்கில் புதிய மத்திய ஆள்பலத் தளம் திறப்பு

3 mins read
3a83efa2-bea5-4ae1-9370-6726fded2096
புதிய மத்திய ஆள்பலத் தளத்தில் உள்ள லைஃப்ஸ்டைல் மார்ட்டில் தேசிய சேவையாளருடன் உரையாடும் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் (நடுவில்). அவருடன் தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது (இடமிருந்து இரண்டாவது), தற்காப்பு துணையமைச்சர் டெஸ்மண்ட் சூ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

போரில் வெற்றி என்பது தொடக்கத்தில் நம்மிடம் உள்ள படைகளின் அளவினாலோ உபகரணங்களின் வகையாலோ தீர்மானிக்கப்படாது. மாறாக, பரிணாம வளர்ச்சியின் வேகத்தாலேயே தீர்மானிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) புதிய மத்திய ஆள்பலத் தளத்தின் (சிஎம்பிபி) அதிகாரபூர்வத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர், இன்றைய சிக்கலான பாதுகாப்புச் சூழலில் சிங்கப்பூர் தனது சொந்த தற்காப்புக்கு அளிக்கும் உறுதிப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

“கடந்த 60 ஆண்டுகளில் கொந்தளிப்பான சூழல்களும் சவால்களும் இருந்தபோதிலும், யாரும் நமது வாழ்வுக்கு கடன்பட்டவர்கள் இல்லை என்ற நமது நம்பிக்கை மாறாமல் உள்ளது.

“சிங்கப்பூரர்கள் என்று அழைக்கப்படுவதற்கான உரிமையை நாமே சம்பாதிக்க வேண்டும். இதனால்தான், நல்ல காலத்திலும் கடினமான காலத்திலும் நமது தற்காப்பை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.

இந்த உணர்வை வெளிப்படுத்துவதில் சிஎம்பிபி ஒரு முக்கியப் பங்கு வகிப்பதாக திரு சான் குறிப்பிட்டார்.

புதிய மத்திய ஆள்பலத் தளத்தைத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கிறார்.
புதிய மத்திய ஆள்பலத் தளத்தைத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கிறார். - படம்: சாவ்பாவ்

திறப்பு விழாவில் தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது, தற்காப்பு துணையமைச்சர் டெஸ்மண்ட் சூ, தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புக்கிட் கோம்பாக்கில் உள்ள தற்போதைய தற்காப்பு அமைச்சின் தலைமையகத்திற்கு அருகிலும் கேஷு பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு எதிரிலும் அமைந்துள்ள புதிய சிஎம்பிபி வளாகம், தேசிய சேவைக்குக் காத்திருப்போருக்கும் தேசிய சேவையாளர்களுக்கும் ஒரு பல்துறை மையமாக இருக்கும்.

தேசிய சேவைக்கு ஆளெடுப்பு, மருத்துவப் பரிசோதனை, உடலுறுதி, நிர்வாகச் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இங்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்த வளாகத்தில் அனைத்துக் காலநிலையிலும் பயன்படுத்தக்கூடிய முதல் உடலுறுதிச் சீரமைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய உடலுறுதிச் சீரமைப்பு நிலையத்தின் ஓர் அங்கமான கூரையுடன் கூடிய கொண்ட ரப்பர் ஓட்டத் தடம்.
புதிய உடலுறுதிச் சீரமைப்பு நிலையத்தின் ஓர் அங்கமான கூரையுடன் கூடிய கொண்ட ரப்பர் ஓட்டத் தடம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இங்கு தேசிய சேவையாளர்கள் தங்களது தனிநபர் உடலுறுதிச் சோதனை, தேசிய சேவை உடலுறுதி மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் ஆகியவற்றை கூரையுடன் கூடிய ஓட்டத் தடங்கள், மேம்படுத்தப்பட்ட சுய சேவை இயந்திரங்கள் ஆகியவற்றுடன் பூங்கா போன்ற சூழலில் வசதியாக மேற்கொள்ள முடியும்.

இந்த நிலையம், செயல்பாடுகளை எளிதாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன்மூலம், தேசிய சேவையாளர்களின் சோதனைகளின் நேரம் 10 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் ஆயுதப்படையின் இரண்டாவது வட்டாரச் சுகாதார மையமும் இங்கு அமைந்துள்ளது. இது, முன்பு சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் இருந்த அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, தேசிய சேவையாளர்களுக்கான மருத்துவ வசதிகளைச் சீரமைக்கிறது.

இத்துடன், சிங்கப்பூரின் மூன்றாவது ‘லைஃப்ஸ்டைல் மார்ட்’ விற்பனை நிலையமும் இங்கு அமைந்துள்ளது. இதில் முதன்முறையாக, ரேடியோ அலைவரிசை அடையாளக் குறியீட்டு சுய-பரிவர்த்தனை இயந்திரங்கள் (RFID self-checkout kiosks) இடம்பெறுகின்றன.

புதிய மையத்தில் 700 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவு நிலையம், குழந்தைப் பராமரிப்பு நிலையம், காற்பந்துத் திடல், உடலுறுதி வளாகம் போன்ற வசதிகளைப் பொதுமக்களும் பயன்படுத்த முடியும்.

சிஎம்பிபி தளபதி கர்னல் ஹூ வேய் வேய் இயன், இந்த இடமாற்றத்தை சிங்கப்பூர் தற்காப்புத் துறையில் ஒரு பெரிய மைல்கல்லாக குறிப்பிட்டார்.

“நாங்கள் எங்கள் செயல்முறைகளைப் புதுப்பித்து, மின்னிலக்க அமைப்புகளை அறிமுகப்படுத்தி, பயனரின் பயணம் தடையற்றதாக இருக்க அடையாளப் பலகைகளை மறுவடிவமைப்பு செய்துள்ளோம்.

“புதிய வளாகத்தின் திறப்பிற்கு முன்பு குறைபாடுகளைக் கண்டறிய மாதக்கணக்கிலான மாதிரியாக்கங்களும் பயனர் சோதனைகளும் எங்களுக்கு உதவின. தேசிய சேவையாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் செயல்திறனை மேம்படுத்துவதும் எங்களது இலக்கு,” என்று அவர் கூறினார்.

புதிய வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவ வகைப்பாட்டு நிலையத்தில், தேசிய சேவைக்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட சந்திரசூரியன் லக்ஷன், 16, தமது அனுபவம் மூத்த நண்பர்களின் அனுபவத்திற்கு மிகவும் மாறுபட்டதாக இருந்ததாகத் தெரிவித்தார்.

புதிய வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவ வகைப்பாட்டு நிலையம்.
புதிய வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவ வகைப்பாட்டு நிலையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“அவர்களின் காலத்தில், செயல்முறை பெரும்பாலும் கையேடு சார்ந்ததாகவும் முகப்புகளில் நீண்ட வரிசைகள் இருந்ததாகவும் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். இப்போது மின்னிலக்க அமைப்புகள் இருப்பதால் பரிசோதனை மிகவும் விரைவாகவும் சீராகவும் நடைபெற்றது,” என்றார் அவர்.

மேலும், சிஎம்பிபி வளாகத்தில், சிங்கப்பூரின் தேசிய சேவை வரலாறு குறித்த புதிய காட்சிகள், தேசிய சேவையின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள தமக்கு உதவியதாக அவர் கூறினார்.

“அவற்றைப் பார்த்தபின், இந்த தனிப்பட்ட சிங்கப்பூர் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்,” என்று லக்ஷன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்