ஏழாண்டுகளுக்கு முன்பு பலதுறைத் தொழிற்கல்லூரியில் தமக்குப் பிடிக்காத பாடப்பிரிவில் படித்தபோதும், நண்பரின் இறப்பிலிருந்து மீள முடியாமலும் தவித்த 25 வயது சாண்டிக்கு யாரை நாடுவது எனத் தெரியவில்லை. தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் ஆலோசகர்களிடம் பேசியபோது அவர்கள் பெற்றோரைத் தொடர்புகொண்டதால், அதன்மீது நம்பிக்கை இழந்ததாக அவர் உணர்ந்தார். அவருக்குப் பாதுகாப்பான ஆலோசனை தேவைப்பட்டது.
இந்நிலையில், 12 முதல் 25 வயது வரையிலான இளையர்களுடன் பணியாற்றும் ‘லிமிட்லெஸ்’ சமூக சேவை அமைப்பு, பீஷான் ஸ்திரீட் 13, புளோக் 182ல் தனது நேரடி மனநல ஆலோசனை நிலையத்தைச் சனிக்கிழமையன்று (நவம்பர் 21) அதிகாரபூர்வமாகத் திறந்தது.
தொடக்கத்தில் பெற்றோரைத் தொடர்புகொள்ள வேண்டாம் என்ற தமது கோரிக்கையை இவ்வமைப்பு மதித்ததாகவும், பின்னர் ஆலோசகர், தமக்கு உதவி தேவைப்படுவது குறித்துத் தெளிவாகப் பெற்றோரிடம் எடுத்துரைத்ததால் உறவு மேம்பட்டதாகவும், மனிதர்கள்மீது மீண்டும் நம்பிக்கை பிறந்ததாகவும் சாண்டி கூறினார்.
திறப்பு விழாவில் பேசிய சுகாதார, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், இளையர்கள் உதவி நாடும்போது விமர்சிக்கப்படுவோம் என்ற அச்சத்தையும், பெற்றோர் ஒப்புதல் பெறுவதால் ஏற்படும் தாமதத்தையும் சுட்டிக்காட்டினார்.
பெற்றோர் ஒப்புதலும் பெற்றோர் ஈடுபாடும் ஒன்றல்ல என்றும், இது குறித்துச் சுகாதார அமைச்சு வழிகாட்டுதல்களை முன்மொழிந்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெற்றோரை வருத்தப்படுத்த விரும்பாத இளையர்கள் அவர்களுக்கு முன் இயல்பாகக் காட்ட்சிக் கொள்வதாகவும், மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்காவிடில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை ஏற்படலாம் என்றும் ஆலோசகர் சியென் நாயுடு எச்சரித்தார்.
கடந்த 2025ல் தங்களைச் சந்தித்தோருக்கு நிலவிய பிரச்சினைகளில் குடும்பப் பிரச்சினைகள் மூன்றாவது முக்கியமான ஒன்றாக இருந்ததாகவும், 13 வயது, அதற்குட்பட்டோருக்கு மட்டுமே பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் எனவும் நிர்வாக இயக்குநர் ஆஷர் லோ தெரிவித்தார்.
இரு ஐந்தறை வீவக வீடுகளின் அளவிலான இந்நிலையத்தில் ஐந்து ஆலோசனை அறைகள், மூன்று தொலைபேசிக் கூடங்கள், மூன்று சிகிச்சை அறைகளாக மாற்றக்கூடிய செயல்பாட்டுப் பகுதி ஆகியவை உள்ளன. ஒரே நேரத்தில் 11 ஆலோசனை அமர்வுகளை நடத்த முடியும். சமூகப் பணியாளர்கள், ஆலோசகர்கள், உளவியலாளர்கள் என 20 மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றுவர்.
