புத்தாண்டு (ஜனவரி 1) முதல் அலெக்சண்ட்ரா மருத்துவமனைக்குப் புதிய தலைமை நிர்வாக அதிகாரி பதவி ஏற்கவுள்ளார்.
டாக்டர் ஜேசன் புவா வகித்துவந்த அப்பதவியை திருவாட்டி மார்கரெட் லீ புதன்கிழமை முதல் ஏற்பார்.
திருவாட்டி லீ அதே மருத்துவமனையில் தலைமை தாதியராகவும் கலாசார அதிகாரியாகவும் முன்பு பணியாற்றியவர் என்று அலெக்ஸான்ட்ரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் நிறைந்த திருவாட்டி லீ, கடந்த ஜூலை மாதம் அப்பதவிக்கு அடையாளம் காணப்பட்டார். அதுமுதல் எதிர்காலத்துக்கு ஏற்ப மருத்துவமனையில் உத்திப்பூர்வ மாற்றங்களைச் செய்வதில் அவர் தலைமை வகித்து வந்துள்ளார்.
தலைமை தாதியராக 2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டுவரை திருவாட்டி லீ பல சிறந்த சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக தாதியர் பணி மேம்பாட்டுக்கும் நோயாளிகளின் ஒருங்கிணைந்த பராமரிப்புக்கும் வரைமுறைகளை வகுத்துள்ளார்.
அவர் தாதியருக்கான அதிபர் விருதை 2021ஆம் ஆண்டு பெற்றுள்ளார். அதோடு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ‘மொக்தார் ரியாடி பின்னகல்’ என்ற உயரிய விருதையும் கடந்த 2019ஆம் ஆண்டில் வென்றவர் ஆவார்.
அலெக்சண்ட்ரா மருத்துவமனை படிப்படியாக மறுமேம்பாடு செய்யப்பட்டு 2028ஆம் ஆண்டுக்குள் 1,300 நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளுடன் ஒருங்கிணைந்த மருத்துவ வளாகமாக உருமாறவிருக்கும் வேளையில் திருவாட்டி லீ, தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை அமைப்புடன் (NUHS) கடந்த 2018ஆம் ஆண்டில் அலெக்சண்ட்ரா மருத்துவமனை இணைந்ததும் அதன் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக டாக்டர் புவா பணியமர்த்தப்பட்டார். புத்தாண்டு முதல் அவர் அதே மருத்துவமனையின் மருத்துவமாற்றங்கள் பிரிவின் புதிய துணைத்தலைவராக பதவி ஏற்பார்.

