சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் மேம்பாடு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் மேம்பாடு

படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

22 Oct 2026 - 7:21 pm

2 mins read

பயணிகளுக்குத் தனிப்பட்ட திரையரங்கு போன்ற புதிய அனுபவத்தை வழங்கும் வகையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானங்களில் உள்ள பொழுதுபோக்குக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன.

2027ஆம் ஆண்டு முதல் சேவை வழங்கவிருக்கும் 41 புதுப்பிக்கப்பட்ட ஏர்பஸ் ஏ350 வகை விமானங்களிலும் புதிய போயிங் 777-9 வகை விமானங்களிலும் இந்த மாற்றங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று வியாழக்கிழமை (அக்டோபர் 22) ஓர் அறிக்கை வழியாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏர்பஸ் ஏ350-900 நீண்டதொலைவு, மிக நீண்டதொலைவுச் சேவை வழங்கும் விமானங்களின் பிஸ்னஸ் வகுப்பில் 22 அங்குல நவீன (4கே ஓஎல்இடி) திரைகளும், முதல் வகுப்புப் பயணிகளுக்கு 32 அங்குலத் திரைகளும் அமைக்கப்படும். போயிங் 777-9 விமானங்களின் பிரிமியம் எக்கானமி வகுப்பில் 16 அங்குலத் திரைகளும், எக்கானமி வகுப்பில் 13 அங்குலத் திரைகளும் இடம்பெறும்.

மேலும், பயணிகள் தங்களின் ‘புளூடூத்’ கருவிகளை அந்த அமைப்போடு இணைத்துக்கொள்ளவும் முடியும். மேம்படுத்தப்பட்ட தேடல் வசதி, திரையை இயக்கிக்கொண்டே மற்ற காணொளிகளைத் தேடும் வசதி போன்றவை புதிய அம்சங்களாகச் சேர்க்கப்படவுள்ளன. பிஸ்னஸ் மற்றும் முதல் வகுப்புப் பயணிகள் உணவு உண்பதற்கும் உறங்குவதற்கும் ஏற்றவாறு இருக்கைகளின் நிலைகளைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

அத்துடன், 2027ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைச் சில விமானங்களில் எஸ்ஐஏ அறிமுகப்படுத்தவுள்ளது. ஏர்பஸ் ஏ350, ஏர்பஸ் ஏ380 விமானங்களில் அச்சேவை படிப்படியாகக் கொண்டுவரப்படும்.

இதன்மூலம் பயணிகள் அதிவேக இணையச் சேவையைப் பெறுவர். சுவீட் (suite), முதல் வகுப்பு, பிஸ்னஸ் வகுப்புப் பயணிகளுக்கும், பிபிஎஸ் கிளப், கிரிஸ்ஃபிளையர் உறுப்பினர்களுக்கும் வரம்பில்லா இலவச இணையச் சேவை தொடர்ந்து வழங்கப்படும்.

அனைத்து வகுப்புப் பயணிகளுக்கும் புதிய உணவு, வசதிகள் தொடர்பான கூடுதல் விவரங்கள் நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்