புதிய சாங்கி ஈஸ்ட் நகர்ப்புறம்: தயாராகும் திட்டப் பணிகள்

2 mins read
a5b9bece-da9b-4379-a81f-6d7ce8a01238
வரவிருக்கும் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம் (ஓவியரின் கைவண்ணம்). - படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்.

புதிய சாங்கி ஈஸ்ட் நகர வட்டாரத் தொலைநோக்குத் திட்டத்திற்கான முதற்படி தொடங்கியிருக்கிறது.

புதிய வட்டாரத்தின் அமைப்பை வரைந்து அதன் தேவைகளை ஆராயுமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

புதிய சாங்கி ஈஸ்ட் மேம்பாட்டின் ஒரு பகுதியாகச் சாங்கி ஈஸ்ட் நகர வட்டாரம் உருவாக்கப்படும். 40 ஹெக்டர் நிலப்பரப்பில் (கிட்டத்தட்ட 56 காற்பந்துத் திடல்களுக்குச் சமம்) அமையவிருக்கும் அது வர்த்தக, வாழ்வியல் நடுவமாகத் திகழும். புதிய வட்டாரம், வரவிருக்கும் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையத்துக்கும் தானா மேரா படகுத்துறை முனையத்துக்கும் இடையில் உருவாக்கப்படும்.

ஐந்தாம் முனையத்தை 2030களின் நடுப்பகுதியில் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது சாங்கி விமான நிலையத்திற்கு வந்துபோகும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 140 மில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய 90 மில்லியனைக் காட்டிலும் அது 55 விழுக்காட்டுக்கும் அதிகம்.

ஆகஸ்ட் 13ஆம் தேதி போக்குவரத்து அமைச்சும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் அரசாங்கத்தின் ஜிபிஸ் (GeBiz) இணையவாசலில் ஒப்பந்தத்திற்கான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்திருந்தன. அவற்றின்படி, புதிய வட்டாரம் அனைத்துலகப் பயணிகளையும் உள்ளூர்வாசிகளையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாங்கி ஈஸ்ட் நகர வட்டாரம் சாங்கி விமான நடுவத்தை வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. விமான நிலையத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளுக்கும் அது ஆதரவாக அமையும்.

சாங்கியின் தெற்கே உத்தேச நீர்முகப்புப் பகுதியில் புதிய வட்டாரம் அமைந்திருக்கும் என்று அமைச்சும் ஆணையமும் குறிப்பிட்டன. சிங்கப்பூருக்கும் உலகின் மற்றப் பகுதிகளுக்கும் இடையில் நுழைவாயிலாகத் திகழும் விதமாக அது இருக்கவேண்டும் என்றும் சிங்கப்பூரின் மற்றப் பகுதிகளில் இருந்து தனித்துவமாக அது தெரியவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நியமிக்கப்படும் ஆலோசனை நிறுவனம் அமைச்சுடனும் ஆணையத்துடனும் சேர்ந்து திட்டத்தை ஆராய்ந்து உருவாக்கும் என்று ஆணையத்தின் விமான நிலைய வளர்ச்சி, திட்டப் பிரிவு இயக்குநர் புவா சாய் டெக் கூறினார். திட்டத்தின் உருவாக்கத்தில் நகர மறுசீரமைப்பு ஆணையம் உள்ளிட்ட மற்ற அமைப்புகளையும் பங்குதாரர்களையும் அந்நிறுவனம் கலந்தாலோசிக்கும் என்றும் திரு புவா சொன்னார்.

ஒப்பந்தத்திற்கான முதற்கட்ட ஆவணங்களை அடுத்த மாதம் (செப்டம்பர்) 24ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஒப்பந்தம் அடுத்த ஆண்டு (2026) நடுப்பகுதியில் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்