உலகப் பொருளியல் சவால்களை எதிர்கொள்ள ஐந்து அம்சத் திட்டம்

சிங்கப்பூர் - சீனா நட்புறவில் புதிய அத்தியாயம்

உலகப் பொருளியல் சவால்களை எதிர்கொள்ள ஐந்து அம்சத் திட்டம்

படம்: தமிழ் முரசு

24 Sep 2026 - 6:50 pm

2 mins read

சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே அரை நூற்றாண்டாகத் தொடரும் வலுவான நட்புறவு, மாறிவரும் உலகளாவியப் பொருளியல் சூழலுக்கேற்ப மேலும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. 

புவிசார் அரசியல் பதற்றங்கள், வர்த்தகத் தடைகள் தொழில்நுட்பப் போட்டிகள் அதிகரித்து வரும் சூழலில், இரு நாடுகளும் தங்களின் எதிர்காலப் பொருளியல் பங்காளித்துவத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தீர்மானித்துள்ளன.   

வியாழக்கிழமை (செப்டம்பர் 24) தொடங்கிய ‘சிங்கப்பூர்-சீனா இருநாட்டு உறவுகள்’ வர்த்தகக் கருத்தரங்கத்தில் நாடுகளுக்கிடையே தொடரும் நீண்டகால நட்புறவு, வருங்காலத்தில் கைகோக்க வேண்டிய துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

சிங்கப்பூரில் இருக்கும் சீனத் தூதரகம் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சீன வர்த்தக அமைப்பின் தலைவர் லீ யீ ஷியான், சிங்கப்பூர்-சீனா இடையிலான அரசதந்தர உறவுகளின் 36வது ஆண்டு நிறைவு, சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ சீனாவுக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பயணத்தின் 50வது ஆண்டையொட்டி, இருதரப்புப் பொருளியல் பிணைப்பு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

1976ல் அமரர் லீ சீனா சென்றபோது விதைக்கப்பட்ட நம்பிக்கை, இன்று தொழிற்பூங்கா, சுற்றுச்சூழலியல் நகரம் எனப் பல பெரிய கூட்டுத் திட்டங்களாக உருவெடுத்துள்ளதை திரு லீ யீ ஷியான் நினைவுகூர்ந்தார்.   

தற்போது உலகமயமாதல் 2.0 அத்தியாயத்தில், செலவு குறைந்த இடங்களைத் தாண்டி பாதுகாப்பான, நம்பகமான, மீள்திறன்மிக்க தொழில் மையமாகச் சிங்கப்பூர் திகழ்கிறது என்று குறிப்பிட்ட சீனப் பேராளர், தென்கிழக்காசியாவிலும் அனைத்துலகச் சந்தைகளிலும் அடியெடுத்து வைப்பதற்கான முக்கிய நுழைவாயிலாகச் சீன நிறுவனங்கள் சிங்கப்பூரைக் கருதுகின்றன என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்தச் சூழலில், இரு நாடுகளின் எதிர்காலப் பங்காளித்துவத்துக்காக ஐந்து முக்கிய அம்சங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு, பசுமைப் பொருளியலில் இளையர்கள் ஆய்வாளர்களுக்கான கூட்டுப் பயிற்சிகள் மூலம் எதிர்காலத் திறனாளர்களை உருவாக்குவது முதல் திட்டமாகும். 

ஏஐ, மின்னிலக்கப் பொருளியல், உயிர் அறிவியலில் கூட்டு ஆய்வுகளை மேற்கொண்டு தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை முன்னெடுப்பது இரண்டாவது அம்சமாகும்.   

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த தூய்மை எரிசக்தி, பசுமை நிதி வழியே பசுமை மாற்றத்தை விரைவுபடுத்துவது, இரு நாடுகளிலும் மூப்படைந்துவரும் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு, ஆரோக்கியமாக மூப்படைதல், வேலைவாய்ப்பில் பரஸ்பர அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது ஆகியவற்றிலும் இணைந்து செயல்படுவது குறித்தும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அடுத்த ஆண்டு சிங்கப்பூர் ஆசியான் தலைமையை ஏற்கும் வேளையில், வட்டார அளவிலான விரிவான பொருளியல் பங்காளித்துவம் (ஆர்சிஇபி) தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் வட்டாரப் பொருளியல், அமைதியை வலுப்படுத்துவது குறித்து ஒன்றிணைந்து செயலாற்றுவதும் சீனா-சிங்கப்பூர் நட்புறவின் முக்கிய இலக்காக முன்வைக்கப்பட்டது. 

இருநாள் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் எதிர்கால உலகின் சவால்களை நேர்த்தியாகக் கடந்து சென்று உலக அரங்கில் வளர்ச்சியை எட்டிப்பிடிக்க உதவும் பல்வேறு உத்திகள் குறித்து ஆராயப்படவுள்ளது.   

குறிப்புச் சொற்கள்
சீனாசிங்கப்பூர்நல்லுறவு