தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-இந்தோனீசிய உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் வோங் பெருமிதம்

2 mins read
a9cf36f8-5f57-4ea9-bc80-28c95338380e
ஜகார்த்தா அதிபர் மாளிகையில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

புதிய வாய்ப்புகளில் ஒத்துழைப்பதன் மூலம் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் தங்களது இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.

இந்தோனீசியாவின் புதிய அதிபரான திரு பிரபோவோவும் சிங்கப்பூரின் புதிய பிரதமரான தாமும், இதற்கு முன்னர் அந்தந்தப் பதவிகளில் இருந்தோர் ஆற்றிய கடமைகள் மூலம் நிர்வாகத் திறனில் பலனடைந்த விதத்தை திரு வோங் விவரித்தார்.

“புதிய தலைவர்களான நாங்கள் இருவரும் எங்களது இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளோம். அத்துடன், இரு நாடுகளின் உறவை இன்னும் மேலே கொண்டு செல்வோம்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டு உள்ளார்.

ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில் திரு வோங்கும் அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் இணைந்து புதன்கிழமை (நவம்பர் 6) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சிங்கப்பூரின் புதிய பிரதமராக இவ்வாண்டு மே 15ஆம் தேதி திரு வோங் பதவி ஏற்றார். அதேபோல, இந்தோனீசியாவின் புதிய அதிபராக திரு பிரபோவோ அக்டோபர் 20ஆம் தேதி பதவி ஏற்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய திரு பிரபோவோ, சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான அணுக்க உறவுகளை மறுஉறுதிப்படுத்தினார்.

தாம் பதவி ஏற்ற பின்னர் இந்தோனீசியாவுக்கு வருகை புரிந்த முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற முறையில் திரு வோங்கின் வருகை அர்த்தம் நிறைந்ததாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

“இந்தோனீசியாவுக்கு நெருக்கமாக உள்ள அண்டைய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பங்காளி நாடு. இருதரப்பிலும் நல்ல முறையில் ஒத்துழைப்பை வளர்ப்பதோடு ஆசியான் கட்டமைப்பிலும் இடம்பெற்றுள்ளோம்,” என்றார் திரு பிரபோவோ.

தொடர்புடைய செய்திகள்

இந்தோனீசியாவுக்கு இரு நாள் பயணமாக நவம்பர் 5ஆம் தேதி ஜகார்த்தா சென்று சேர்ந்த சிங்கப்பூர் பிரதமரை, இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோ, தொடர்பு, மின்னிலக்க விவகார அமைச்சர் மெயுட்யா ஹஃபித், சிங்கப்பூருக்கான இந்தோனீசியத் தூதர் சூர்யோ பார்த்தோமோ ஆகியோர் வரவேற்றனர்.

திரு வோங் மற்றும் திரு பிரபோவோ இடையில் இவ்வாண்டு நிகழ்ந்திருக்கும் நான்காவது சந்திப்பு இது.

அக்டோபர் 20ஆம் தேதி அதிபர் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

அதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ நடத்திய சிங்கப்பூர்-இந்தோனீசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பின்போதும் திரு வோங்கும் திரு பிரபோவோவும் சந்தித்தனர்.

பின்னர், ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற 21வது ஷங்ரிலா கலந்துரையாடல் நிகழ்வில் சிறப்புரையாற்ற திரு பிரபோவோ வந்திருந்தபோதும் இருவரும் சந்தித்துப் பேசினர்.

குறிப்புச் சொற்கள்