மெல்பர்ன் மருத்துவமனையில் சக ஊழியர்களைப் படம் பிடித்த விவகாரம் தொடர்பில் சிங்கப்பூர் மருத்துவர் ரயன் சோ, 27, மீது புதிய குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சோமீது வெள்ளிக்கிழமை (ஜூலை 25) ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெருக்கமாக இருக்கும் படங்களை உருவாக்குதல், ஒளிசார் கண்காணிப்பு சாதனத்தைப் பயன்படுத்துதல், காவல்துறைக்கு உதவத் தவறுதல் உள்ளிட்டவை சோ மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
இந்த மாதத் தொடக்கத்தில், ஹைடல்பார்க்கில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனையில் ஊழியர்கள் சிலர், படம்பிடிக்கும் கேமராவைக் கழிவறையில் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பின்தொடர்தல், மற்றும் ஒளிசார் (ஆப்டிகல்) கண்காணிப்பு சாதனத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சோ மீது சுமத்தப்பட்டன.
மூன்று பெரிய மருத்துவமனைகளில் சுமார் 4,500 அந்தரங்க (நெருக்கமான) காணொளிகளைப் பதிவுசெய்ததாகவும் இதில் குறைந்தது 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ‘ஏபிசி’ நியூஸ் அறிக்கை குறிப்பிட்டது.
மேலும் நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டிய செய்தி நிறுவனம் “இந்தக் காணொளிகளில் இடம்பெற்றுள்ளவர்களில் பெரும்பாலோர் பெண் மருத்துவர்கள், தாதியர்கள், துணை மருத்துவர்கள் என்றும், இவர்களில் பலர் 2021 முதல் சோ பணிபுரிந்த மருத்துவமனைகளில் பணிபுரிந்தவர்கள் என்றும் விவரித்தது.
இதன் தொடர்பில் சோ கைது செய்யப்பட்ட பிறகு இரண்டு கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி, வன் தட்டு (ஹார்ட் டிரைவ்), பல வெள்ளைப் பின்னல் வலைப் பைகள் மற்றும் அகற்றக்கூடியக் கொக்கிகள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சோவுக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மருத்துவ உரிமமும் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. தாம் எதிர்நோக்கியுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்த்து முறையீடு செய்யவுள்ளார் சோ.