தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் குற்றவாளிகளுக்கு மேம்பட்ட ஆதரவளிக்கும் புதிய அறப்பணி

3 mins read
மஞ்சள் நாடா அமைப்பின் 25ஆம் ஆண்டுவிழாவில் அறிவிப்பு
5a091536-1c43-44f3-ba11-775731e63a0f
25 ஆவது ஆண்டுவிழா மேடையில் பங்கேற்ற விருந்தினர்கள். (இடமிருந்து) சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பொது மேலாளர் கைல் டான், தேசிய சமூகச் சேவைகள் மன்றத் தலைமை நிர்வாக அதிகாரி டான் லி சான், நியூஜென் நிதியின் தலைவர் ஜோசுவா டே, சட்ட அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், உள்துறை அமைச்சின் மூத்த துணை அமைச்சரும், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சருமான முஹம்மது ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம், மஞ்சள் நாடா சிங்கப்பூரின் தலைவர் பிலிப் டான் இங் சியோங், மஞ்சள் நாடா நிதித் தலைவர் எட்மன்ட் செங், சிங்கப்பூர்ப் பின்னலச் சேவை சங்கத் தலைவர் ஜெஃப்ரி பே, சிங்கப்பூர்ப் போதைப்பொருள் தடுப்புச் சங்கத் தலைவர் கில்லியன் கோ டான், தொழிலியல், சேவைகள் கூட்டுறவு மன்றத் தலைவர் சலிம் காதிர். - படம்: மஞ்சள் நாடா அமைப்பு

மஞ்சள் நாடா அமைப்பின் 25ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தையொட்டி, தொழிலியல், சேவைகள் கூட்டுறவு மன்றம் (Industrial and Services Co-operative Society Limited), நியூஜென் நிதி, மஞ்சள் நாடா நிதி ஆகியவை இணைந்து, ‘மஞ்சள் நாடா கேர்ஸ்’ எனும் அறப்பணியைத் தொடங்கியுள்ளன.

முன்னாள் குற்றவாளிகள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதைக் குறைத்து அவர்கள் நிலையான வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுவது, முன்னாள் குற்றவாளிகள் சமூகத்திற்குப் பங்களிக்க உதவுவது, முன்னாள் குற்றவாளிகளின் குடும்பங்கள், குழந்தைகளை ஆதரிப்பது, முழுமையான பராமரிப்பை உறுதிசெய்யும் சூழலை வலுப்படுத்துவது உள்ளிட்டவற்றை இந்த அறப்பணி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரண்டாவது வாய்ப்பு அளிப்பதில் கடப்பாடு கொண்டுள்ள மஞ்சள் நாடா இயக்கத்தின் 25ஆம் ஆண்டுவிழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) ‘‌‌‌ஷங்கிரி-லா’ ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.

விழாவில் சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங்.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங். - படம்: மஞ்சள் நாடா அமைப்பு

அடுத்த ஆண்டு (2026) முற்பாதியில் செயல்படத் தொடங்கவுள்ள இந்த ‘ஒய்ஆர் கேர்ஸ்’ (YR Cares) மறுவாழ்வு, மறு ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கான நிதியை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் விரிவுபடுத்துமெனத் தெரிவிக்கப்பட்டது.

தொழிலியல், சேவைகள் கூட்டுறவு மன்றத்தின் (ISCOS) திட்டங்கள் முன்னாள் குற்றவாளிகள் 1,800 பேருக்கு ஆதரவளித்துள்ளது. நியூஜென் நிதி 160க்கும் மேற்பட்ட முன்னாள் குற்றவாளிகளின் குடும்பங்களுக்கும் 560 குழந்தைகளுக்கும் சேவைசெய்துள்ளது. மஞ்சள் நாடா நிதி, மறுவாழ்வு, பராமரிப்புத் திட்டங்களுக்கு நிதியளித்து, அதன்மூலம் 4,095 பேருக்கு ஆதரவளித்துள்ளது என்பனவற்றை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் புதிய இணைவு அந்த ஒட்டுமொத்த ஆதரவையும் மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த முன்னெடுப்புக்கான சேவை நிதி 5 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விழாவின் இறுதியில் திரட்டப்பட்ட நிதிக்கான காசோலை வழங்கப்பட்டது.
விழாவின் இறுதியில் திரட்டப்பட்ட நிதிக்கான காசோலை வழங்கப்பட்டது. - படம்: மஞ்சள் நாடா அமைப்பு

இத்துடன் புதிதாக, லிம் சு பெங் - மஞ்சள் நாடா நிதி ‘ஸ்டார்’ உபகாரச் சம்பளம் அறிவிக்கப்பட்டது. நன்கொடையாக அளிக்கப்பட்ட, புகழ்பெற்ற கலைஞர் லிம் சு பெங்கின் கலைப்பொருள்கள் ஏலம் விடப்பட்டு அதன்மூலம் திரட்டப்பட்ட 140,000 நிதியைக்கொண்டு, இந்த உபகாரச் சம்பளம் அறிமுகம் கண்டுள்ளது.

இந்த உபகாரச் சம்பளம், நுண்கலைப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் முன்னாள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அமையும் என்றார் அமைச்சர் எட்வின் டோங்.

ஏறத்தாழ 800 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சின் மூத்த துணை அமைச்சரும், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சருமான முஹம்மது ஃபை‌‌‌ஷால் இப்ராஹிமும் கலந்துகொண்டார்.

“ஸ்டார்லைட் ஒடிஸி: வாழ்க்கையை மாற்றியமைக்கும் பணியில் 25 ஆண்டுகள்” எனும் கருப்பொருளில் கலை, இசை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய விழாவினை, தொண்டூழியராகச் செயல்படும் கர்மிட் சிங், முன்னாள் குற்றவாளிகள் இருவருடன் இணைந்து வழிநடத்தினார்.

இரண்டாம் வாய்ப்பின் மீது நம்பிக்கை கொண்டிருந்த தன் தந்தை தனக்கும் அந்த எண்ணத்தை விதைத்ததாகக் கூறிய அவர், தன்னோடு முன்னாள் குற்றவாளிகள் இருவரும் இந்த நிகழ்ச்சியை வழிநடத்துவது அவர்களுக்கும் சமூகத்துக்கும் நம்பிக்கையளிக்கும் ஒன்றாக அமையும் என நம்புவதாகவும் சொன்னார்.

நியூஜென் நிதி, சிங்கப்பூர் பின்னலச் சேவை சங்கம், சிங்கப்பூர்ப் போதைப்பொருள் தடுப்புச் சங்கம், மஞ்சள் நாடா நிதி ஆகியவற்றுக்கான நிதித் திரட்டுக்கான நிகழ்ச்சியாகவும் நடைபெற்ற இவ்விழாவின் இறுதியில் ‘கேர்’ கட்டமைப்பின் பயனாளிகளுக்காகத் திரட்டப்பட்ட 1,724,182 வெள்ளி நிதிக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்