தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் ராணுவத்தின் புதிய தலைவர் மார்ச் 21ல் பொறுப்பேற்கிறார்

2 mins read
பிரிகேடியர் ஜெனரல் சாய் டெக்சியன், மேஜர் ஜெனரல் டேவிட் நியோவிடமிருந்து அந்தப் பொறுப்பை ஏற்பார்
ca183d51-2323-4e10-9d4f-9e0d68cda484
பிரிகேடியர் ஜெனரல் சாய் டெக்சியன் (இடம்), மார்ச் 21ஆம் தேதி, மேஜர் ஜெனரல் டேவிட் நியோவிடமிருந்து சிங்கப்பூர் ராணுவத் தலைமைப் பொறுப்பை ஏற்பார். - படங்கள்: தற்காப்பு அமைச்சு

பிரிகேடியர் ஜெனரல் சாய் டெக்சியன், மார்ச் 21ஆம் தேதி, மேஜர் ஜெனரல் டேவிட் நியோவிடமிருந்து சிங்கப்பூர் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.

சிங்கப்பூர் ஆயுதப் படையில் தொடரும் தலைமைத்துவப் புதுப்பிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த மாற்றம் அமையும் என்று தற்காப்பு அமைச்சு பிப்ரவரி 25ஆம் தேதி தெரிவித்துள்ளது.

பிரிகேடியர் ஜெனரல் சாய், 40, 2003ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேர்ந்தார். அதன் வெளிநாட்டுக் கல்வி உபகாரச் சம்பளத்தைப் பெற்றவர் அவர்.

கவச வாகனப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய அவர், தற்காப்பு அமைச்சிலும் சிங்கப்பூர் ஆயுதப் படையிலும் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர்.

48வது சிங்கப்பூர் கவச வாகனப் பட்டாளத் தலைவர், 8வது சிங்கப்பூர் கவச வாகனப் பெரும்படையின் தலைவர், கூட்டுத் திட்டம், உருமாற்றத் துறையின் தலைவர் போன்றவை அவற்றில் அடங்கும்.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் பல்வேறு திறன் மேம்பாட்டு, உருமாற்ற முயற்சிகளை பிரிகேடியர் ஜெனரல் சாய் வழிநடத்தியுள்ளார் என்று அமைச்சு கூறியது. மின்னிலக்க, உளவுச் சேவைப் பிரிவை நிறுவியது, சிங்கப்பூர் ஆயுதப் படை 2040க்கான நீண்டகாலத் திட்டத்தை உருவாக்கியது போன்ற நடவடிக்கைகளை அது சுட்டியது.

2012ஆம் ஆண்டு அவர் ஆஃப்கானிஸ்தானில் பணியாற்ற அனுப்பப்பட்டதாகவும் அங்கு நடைபெற்ற அனைத்துலக மறுகட்டுமானத் திட்டங்களுக்குச் சிங்கப்பூர்ப் பங்களிப்பின் ஓர் அங்கமாக அது அமைந்ததாகவும் தற்காப்பு அமைச்சு கூறியது.

மேஜர் ஜெனரல் நியோவின் சிறந்த தலைமைத்துவத்துக்கும் தற்காப்பு அமைச்சுக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படைக்கும் அவர் ஆற்றிய உன்னதச் சேவைக்கும் பாராட்டு தெரிவிப்பதாகத் தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் சிங்கப்பூர் ராணுவத்தில் 1996ஆம் ஆண்டு சேர்ந்தார். சிங்கப்பூர் ஆயுதப் படைக்குச் சிறந்த சேவையாற்றிய அவர், ராணுவத் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட முதல் மின்னல்படை அதிகாரி என்று அமைச்சு குறிப்பிட்டது.

சிங்கப்பூர் ‘கார்ட்ஸ்’ முதல் பட்டாளம், 2வது சிங்கப்பூர் காலாட்படைப் பட்டாளம், 3வது சிங்கப்பூர் படைப்பிரிவு ஆகியவற்றை அவர் வழிநடத்தியுள்ளார்.

2022ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி முதல் சிங்கப்பூர் ராணுவத்தின் தலைவராக அவர் பணியாற்றுகிறார்.

மேஜர் ஜெனரல் நியோவின் தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூர் ராணுவம் உயரிய செயல்திறன் தயார்நிலையைத் தக்கவைத்துள்ளதாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்