சிங்கப்பூரின் பன்முகப் பண்பாட்டைப் போற்றும் வண்ணமயமான சிங்கே அணிவகுப்பைத் தொலைக்காட்சியில் கண்ட சிறுமி மீனாவுக்குத் தானும் ஊர்வலத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
சில மாதங்கள் கழித்து தன் அண்டை வீட்டார், சிங்கே மிதவை ஒன்றை உருவாக்கியதைப் பார்த்த மீனா, தானும் சிறிய மிதவையை உருவாக்கினார்.
ஆனால் சிங்கே ஊர்வலத்துக்கு அந்த மிதவை மிகவும் சிறிது என்று மீனாவின் அண்டை வீட்டார் அவருக்கு நயமாக எடுத்துரைத்து, அதைக் காட்டிலும் பெரிய மிதவை ஒன்றை உருவாக்கும்படி ஊக்கமளித்தார்.
குடும்பத்தினரிடமும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த நண்பர்களிடமும் உதவிபெற்ற மீனா, இறுதியில் பெரிய மிதவை ஒன்றை உருவாக்கி, சிங்கே அணிவகுப்பில் அந்த மிதவையில் தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வலம் வருகிறார்.
மீனாவின் இந்த வெற்றிக் கதையை “என் சிறிய சிங்கே மிதவை” (My Little Chingay Float) எனும் புதிய சிறார் சித்திர நூல் சொல்கிறது.
பொங்கோல் வட்டார நூலகத்தில் ஆகஸ்ட் 14அம் தேதி நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சரும் பொங்கோல் குழுத்தொகுதி அடித்தள ஆலோசகருமான சுன் ஷுவெலிங் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கிட்டத்தட்ட 60 பாலர் பள்ளி மாணவர்களுக்குத் திருவாட்டி சுன், புதிய புத்தகத்தைப் படித்துக் காட்டினார் .
சிங்கே அணிவகுப்பு போன்ற பெரிய தேசிய நிகழ்ச்சிகளைச் சிறார்களுக்கு அறிமுகப்படுத்துவது முக்கியம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூரின் தனித்தன்மையாகத் திகழும் இன, கலாசார நல்லிணக்கத்தைப் பற்றி சிறார்கள் கற்றுக்கொள்கிறார்கள். அதன் வழியாக பிறரை அன்புடனும் மரியாதையுடனும் எப்படி நடத்துவது என்பதையும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
வெவ்வேறு கலாசாரங்களை ஒன்றிணைக்கும் பன்முகத்தன்மை வாய்ந்த விழாவாக சிங்கேயை எடுத்துக்காட்டுவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்று புத்தகத்தின் கதாசிரியரும் வரைகலைஞருமான ஜோசஃப் லீ, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“சிங்கே அணிவகுப்பைச் சீனப் பண்பாட்டின் ஒரு பகுதியாக மக்கள் பரவலாக அடையாளம் காண்கிறார்கள். மீனா என்ற இந்தியச் சிறுமி கதாபாத்திரம் வழியாக சிங்கே அணிவகுப்பு பல கலாசாரங்களை உள்ளடக்குவதைக் காண்பிக்க விரும்பினேன்,” என்று திரு லீ விளக்கினார்.
‘பிசிஎஃப் ஸ்பார்க்கல்டொட்ஸ்’ (PCF Sparkletots), ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ (My First Skool) ஆகிய பாலர் பள்ளிகளிலிருந்து இந்தச் சிறப்புப் புத்தக வெளியீட்டுக்கு வந்திருந்த மாணவர்களில் ஒருவரான ஐந்து வயது நவ்யா ராய், “எனக்கு மீனா என்ற கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது,” என்று கூறினார்.
‘பிசிஎஃப் ஸ்பார்க்கல்டொட்ஸ்’, ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’, ‘லிட்டில் ஸ்கூல் ஹவுஸ்’ (Little Skool-House) பாலர் பள்ளிகள் 2026ஆம் ஆண்டு முதல் இந்தப் புத்தகத்தை அவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கவுள்ளனர்.
மேலும், வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் குறிப்பிட்ட தேசிய நூலகங்களில் இந்தப் புத்தகத்தை இரவல் பெறலாம்.
“என் சிறிய சிங்கே மிதவை” சிறுவர் படப்புத்தகத்தின் மின்னிலக்க பதிப்பை www.chingay.gov.sg என்ற இணையப்பக்கத்தில் பொதுமக்கள் இலவசமாகக் காணலாம்.
தமிழ், சீனம், மலாய் மொழிகளிலும் இந்தப் புத்தகம் வருங்காலத்தில் அறிமுகம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.