பாலர்களுக்குப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் புதிய நூல்

பாலர்களுக்குப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் புதிய நூல்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Oct 2026 - 5:06 pm

2 mins read

தங்கள் பள்ளியில் சந்தேகத்திற்குரிய ஒரு நபரைச் சந்திக்கின்றனர் ஆலி, ரே, ஹேமி எனும் மூன்று மாணவர்கள். அந்த நபர் ஒரு பையை அங்கேயே விட்டுச் செல்கிறார். உடனே மூவரும் ஓடி, ஒளிந்துகொண்டு தங்கள் ஆசிரியரிடம் நடந்ததைத் தெரிவிக்கின்றனர்.

இந்தப் படபடக்கும் சூழ்நிலைக்கு எவ்வாறு இந்த மூன்று மாணவர்கள் தீர்வு காண்கின்றனர் என்பதே 'ஓடு, ஒளிந்துகொள், தெரியப்படுத்து’ எனும் புதிய சிறுவர் நூலின் அம்சமாகும்.

சந்தேகத்திற்கிடமான நடத்தையை எதிர்கொள்ளும்போது உடனடியாக ஓடவும் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துகொள்ளவும் நம்பகமான ஒருவரிடம் தெரிவிக்கவும் பாலர்பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்க இப்புதிய நூல் திங்கட்கிழமை (அக்டோபர் 5) வெளியிடப்பட்டது.

‘எஸ்ஜி பாதுகாப்பு’ இயக்கத்தின் 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, காவல்துறையும் உள்துறை அமைச்சின் எஸ்ஜி பாதுகாப்புத் திட்ட அலுவலகமும் இணைந்து இந்த நூலைத் தொகுத்தன.

வெஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளியில் உள்ள கல்வி அமைச்சு பாலர்பள்ளியில் நடைபெற்ற எஸ்ஜி பாதுகாப்புக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் வெளியுறவு, உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன்.

நூலை அறிமுகப்படுத்தியதோடு, பாலர்பள்ளி மாணவர்களுக்கு அந்நூலை அவர் வாசித்தும் காட்டினார்.

சிறு வயதிலேயே குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்கும் தேவைப்படும்போது உதவி கேட்பதற்கும் ‘ஓடு, ஒளிந்துகொள், தெரியப்படுத்து’ போன்ற வழிமுறைகளை இந்நூல்வழி கற்றுக்கொள்ளலாம் என்றார் திருவாட்டி சிம் ஆன்.

உரிமம்பெற்ற அனைத்துப் பாலர்பள்ளிகளுக்கும் கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் பாலர்பள்ளிகளுக்கும் பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு நூலின் பிரதிகளை அளிக்கும்.

அவசரகாலங்களில் பின்பற்றப்படும் பாதுகாப்புப் பயிற்சிகள் குறித்து மாணவர்கள் ஏற்கெனவே அறிந்திருப்பதால், இந்த நூல் அவர்களுக்குப் பரிச்சயமான ஒரு சூழலில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழாசிரியர் சித்தி ஃபாத்திமா அப்துல் லத்தீஃப், 27, கூறினார்.

“இந்த நூல் இருமொழிகளில் இருந்தால் அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முக்கியமான புதிய தமிழ்ச் சொற்களையும் கற்றுக்கொள்ளலாம்,” என்றார் அவர்.

வரும் நவம்பர் முதல் பொது நூலகங்களில் இந்நூலை இரவல் பெறலாம்.

பொது நூலகங்களில் இந்நூலுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சிகளும் காவல்துறை அதிகாரிகளால் நடத்தப்படும். பொதுமக்கள் நேரடியாக வந்து இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்குக் காவல்துறையின் இணையப்பக்கம் அல்லது Police_pal@spf.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்
பாதுகாப்புசிறுவர் நூல்காவல்துறைஉள்துறை அமைச்சு