புதிய மனிதவளத் தளம் ஜூனில் பொதுமக்களுக்குத் திறப்பு

2 mins read
54c4e7f2-e876-4269-9488-6a1ce9e03a5a
புதிய மத்திய மனிதவளத் தள (சிஎம்பிபி) வளாகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய மத்திய மனிதவளத் தளம் (Central Manpower Base -சிஎம்பிபி) ஜூன் மாதம் முதல் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும். செப்டம்பர் மாதம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும்.

புதிய தளத்தில் விளையாட்டு வசதிகள், உணவு நிலையம் போன்றவை அமைந்துள்ளன.

புதிய சிஎம்பிபியில் உணவு நிலையம்.
புதிய சிஎம்பிபியில் உணவு நிலையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய தளம் அனைத்துத் தேசிய சேவை செயல்பாட்டு விவகாரங்களுக்குமான ஒரே மையமாக விளங்கும். மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்டவையும் அங்கு இடம்பெறும்.

செப்டம்பருக்குள் புதிய தளம் முழுமையாகச் செயல்படுவதற்குத் தயாராக இருக்கும். தேசிய சேவையாளர்களும் தேசிய சேவையில் சேரவிருப்போருக்கும் புதிய தளம் சேவை வழங்கும்.

புதிய வளாகத்துக்கான திட்டங்கள் முதலில் 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டன. புதிய சிஎம்பிபி வளாகம் கே‌ஷியூ பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு எதிரே, தற்போது புக்கிட் கொம்பாக்கில் உள்ள தற்காப்பு அமைச்சின் தலைமையகத்துக்கு அருகே அமைகிறது. மனிதவளத் தளத்தின் தற்போதைய வளாகம், டெப்போ ரோட்டில் உள்ளது.

புதிய வளாகம் ஜூன் மாதம் முதலில் திறக்கப்படும். பின்னர் செப்டம்பரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும் என்று கொம்பாக் மேம்பாட்டுத் திட்டத்துக்கான பிரிவின் இணை இயக்குநர் மூத்த லெஃப்டினன்ட்-கர்னல் லாவ் ஹுய் பூன் தெரிவித்தார். எனினும் தேதிகளை அவர் அறிவிக்கவில்லை.

புதிய வளாகத்தை ஊடகத் துறையினருக்கு அறிமுகப்படுத்திய நிகழ்வில் அவர் பேசினார்.

புதிய வளாகத்தில் அமையும் 700 இருக்கைகள் கொண்ட உணவு நிலையத்தை டிம்பர்+ நிறுவனம் நடத்தும் என்றும் அங்கு கிட்டத்தட்ட 20 உணவுக் கடைகள் இருக்கும் என்றும் என்று மூத்த லெஃப்டினன்ட்-கர்னல் லாவ் தெரிவித்தார்.

மழலையர் பராமரிப்பு நிலையம், காற்பந்துத் திடல், உடற்பயிற்சிப் பகுதி, 500 மீட்டர் ஓட்டப்பாதை ஆகியவையும் அங்கு இருக்கும். அவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

புதிய சிஎம்பிபியில் காற்பந்துத் திடல்.
புதிய சிஎம்பிபியில் காற்பந்துத் திடல். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கே‌ஷியூ பெருவிரைவு ரயில் நிலையத்தையும் புதிய வளாகத்தையும் இணைக்க பாலம் ஒன்றும் அமைக்கப்படும் என்றார் மூத்த லெஃப்டினன்ட்-கர்னல் லாவ்.

புதிய வளாகத்தில் இரண்டு புளோக்குகள் இருக்கும். ஒன்றில் பொதுமக்களுக்கான வசதிகள் இடம்பெறும். மற்றொன்றில் தேசிய சேவை செயல்பாட்டுச் சேவைகள் வழங்கப்படும்.

தற்போதைய வளாகத்துடன் ஒப்பிடுகையில், அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அமையும் புதிய வளாகத்தில் தேசிய சேவையில் சேரக் காத்திருப்போருக்கான மருத்துவப் பரிசோதனைகள் விரைவாக இடம்பெறும். அத்துடன், தேசிய சேவை தொடங்குவதற்கு முன்னர் செய்யவேண்டிய ஐபிபிடி உடலுறுதிச் சோதனையையும் புதிய வளாகத்திலேயே மேற்கொள்ளலாம்.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் இரண்டாவது வட்டார சுகாதார மையமும் புதிய வளாகத்தில் அமையும். அங்கு அன்றாடம் கிட்டத்தட்ட 200 தேசிய சேவையாளர்கள் சேவை பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்