புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9ல் கட்டப்படும் சிங்கப்பூரின் முதல் சமூகப் பராமரிப்பு அரசாங்க வீடுகள் விரைவில் முடிக்கப்பட்டு குடியிருப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடுகளைக் கட்டி முடிப்பதில் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் வரையிலான தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுமானத் திட்டத்தை மேற்கொண்ட பழைய நிறுவனத்தின் தொடர்பில் சில பிரச்சினைகள் எழுந்ததால் தாமதம் ஏற்பட்டது.
சமூகப் பராமரிப்பு வீடுகளை முதலில் இவ்வாண்டு இரண்டாம் காலாண்டிற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கட்டுமானப் பணிகள் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்மனி வில்லேஜ்@புக்கிட் பாத்தோக் பகுதியில் அமைந்துள்ள புதிய சமூகப் பராமரிப்பு வீடுகளையும் அக்கட்டடத்தின் கீழ்த்தளத்தில் கட்டப்பட்டுள்ள 400 இருக்கைகளைக் கொண்ட உணவங்காடியையும் தாம் மேலோட்டமாகப் பார்வையிட்டதாக ஹொங் கா நார்த் நாடாளுமன்ற உறுப்பினரும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சு, போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றுக்கான மூத்த துணை அமைச்சருமான ஏமி கோர் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 28) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அந்த வீடுகள் கட்டி முடிக்கப்படுவதையும் அவற்றுக்குக் குடியிருப்பாளர்களை ஈர்க்கவும் ஆவலுடன் காத்திருப்பதாக டாக்டர் கோர் கூறினார்.
சமூகப் பராமரிப்பு வீடுகள், உதவியுடன் வாழ வகைசெய்யும் அரசாங்க வீடமைப்புத் திட்டத்தின்கீழ் கட்டப்படுகின்றன. தேசிய வளர்ச்சி அமைச்சு, சுகாதார அமைச்சு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) ஆகியவை இணைந்து அத்திட்டத்தை வரைந்தன.
மூப்படையும் சமூகத்தைக் கவனித்துக்கொள்ளும் நோக்குடன் முதியோருக்குக் கூடுதல் வீடமைப்புத் தெரிவுகளை வழங்குவது இந்நடவடிக்கையின் இலக்காகும்.
உதவியுடன் வாழ வகைசெய்யும் வீடுகளின் முதல் சிலவற்றுக்கான பணிகள் தொடங்கப்படுவது 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அத்தகைய ஒவ்வொரு வீட்டிலும் மூத்தோருக்கு நடமாட உதவும் கம்பிகள், சக்கர நாற்காலிகள் போவதற்கு ஏதுவான கழிவறைகள், வழுக்காத தரை போன்றவை இடம்பெறும்.
அடிப்படை சேவைத் திட்டத்துக்கு (பேசிக் செர்விஸ் பேக்கேஜ்) குடியிருப்பாளர்கள் விண்ணப்பிக்கவேண்டும். அதன்கீழ் குடியிருப்பாளர்களுக்கு அவசர உதவி ஏதேனும் தேவைப்பட்டால் அவர்கள் 24 மணிநேரத்துக்கும் கண்காணிக்கப்படுவர். அவர்களுக்கு அடிப்படை சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
தொடர்புடைய செய்திகள்
குடியருப்பாளர்களுக்கு, அவரவர் தேவைகளுக்கேற்ப சம்பந்தப்பட்ட பராமரிப்பு சேவைகளை வழங்குவோரிடம் பரிந்துரைப்பது போன்ற நடவடிக்கைகளை சமூகப் பராமரிப்பு வீடுகள் இருக்கும் வளாகத்தில் செயல்படும் சமூகப் பணி நிர்வாகி (கம்யூனிட்டி மேனேஜர்) மேற்கொள்வார்.

