சிங்கப்பூரின் நவீன நீதித்துறையும் சட்டக் கட்டமைப்பும் அமைக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், மூன்று புதிய சமூக முயற்சிகளைச் சட்ட அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
‘எஸ்ஜிலா200’ (SGLaw200) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்புகள், சிங்கப்பூரின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் சட்டத்தின் ஆட்சி ஆற்றிய பங்கை மக்கள் ஆழமாகப் புரிந்துகொள்ளச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இவற்றில் மரபுடைமை நடைப்பயணம், நடமாடும் கண்காட்சி, சிறப்பு அஞ்சல்தலைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சட்ட மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா இந்த முயற்சிகளை வியாழக்கிழமை (ஜூலை 2) ஹொங் லிம் பூங்காவில் உள்ள ‘இம்பேக்ட்’ (imPAct @ Hong Lim Green) நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.
சட்டம் என்பது வழக்கறிஞர்களுக்கு மட்டுமே உரியதன்று, சட்டத்தின் ஆட்சி நமது அன்றாட வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் அங்கம் என்று நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு சுவா குறிப்பிட்டார்.
பெருவிரைவு ரயிலில் பாதுகாப்பாகப் பயணிக்கும்போதும் இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும் கருத்து வேறுபாடுகளை அமைதியாகத் தீர்த்துக்கொள்ளும்போதும் சட்டத்தின் ஆட்சி அமைதியாகச் செயல்படுகிறது என்று அவர் விவரித்தார்.
நியாயம் ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் வழக்கறிஞராக இருக்க வேண்டியதில்லை என்பதையும் சமூகத்தில் நம்பிக்கை ஏன் முக்கியம் என்பதை உணர அரசாங்கத்தில் பணியாற்ற வேண்டியதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“சட்டத்தின் ஆட்சி என்பது நாம் வெறுமனே பரம்பரையாகப் பெறுவது மட்டுமன்று, மாறாக சிங்கப்பூரர்களின் ஒவ்வொரு தலைமுறையினரும் அதைப் புரிந்துகொண்டு, மதித்து, நிலைநிறுத்த வேண்டிய ஒன்றாகும்,” என்று செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது அவர் வலியுறுத்தினார்.
‘இடம், முன்னேற்றம்: சிங்கப்பூரின் சட்டச் சின்னங்கள் வழியே சட்டத்தின் ஆட்சியைத் தேடி’ என்ற தலைப்பிலான மரபுடைமை நடைப்பயணத்தில் இருபது முக்கியச் சட்டச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
தேசியக் கலைக்கூடம், பழைய நாடாளுமன்றம், ஹொங் லிம் பூங்கா உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் இப்பட்டியலில் உள்ளன.
ஒன்பது இடங்களை உள்ளடக்கிய இலவச வழிகாட்டி நடைப்பயணங்கள் ஜூலை 11ஆம் தேதி தொடங்கி ஆண்டிறுதி வரை நடைபெறும்.
https://sglaw200explore.sg/ என்ற இணையத்தளத்தில் இவற்றுக்குப் பதிவுசெய்துகொள்ளலாம். அதே இணையத்தளத்தில் இருபது இடங்களையும் காண உதவும் மெய்நிகர் வழிகாட்டியும் பொதுமக்களின் வசதிக்காகத் தரப்பட்டுள்ளது.
‘நமது சிங்கப்பூர் கதையில் சட்டத்தின் ஆட்சி’ என்ற தலைப்பிலான நடமாடும் கண்காட்சி ஆகஸ்ட் மாதம் ஹார்பர்ஃபிரண்ட் நூலகத்தில் தொடங்கவுள்ளது.
சிங்கப்பூரின் பொருளியல் முன்னேற்றம், சமூக நல்லிணக்கம், அன்றாட வாழ்க்கை ஆகியவற்றில் சட்டத்தின் ஆட்சி ஏற்படுத்திய தாக்கத்தை இந்தக் கண்காட்சி விளக்குகிறது. சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளுக்கும் இந்தக் கண்காட்சி கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்துறையின் 200 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சிங்போஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து நான்கு சிறப்பு அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
உள்ளூர் வடிவமைப்பாளர் ஆண்டி கோ வடிவமைத்த இந்த அஞ்சல்தலைகளில் சட்ட நிறுவனங்கள் (முதல் தர உள்ளூர் அஞ்சல்தலை), நீதிக்கான அணுகல் (85 காசு), மாற்றுத் தகராறு தீர்வு (90 காசு), நீதியின் எதிர்காலம் (2 வெள்ளி) ஆகிய நான்கு வகைகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றைத் தபால் நிலையங்கள், தெம்பனிஸில் உள்ள அஞ்சல்தலை விற்பனையகம், shop.singpost.com இணையத்தளம் ஆகியவற்றில் வாங்கலாம்.
இத்துடன், இளையர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘சட்டம் ஏன் முக்கியம்’ என்ற தலைப்பில் மாணவர் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழக (ITE) மாணவர்கள் தங்களுக்குரிய பிரிவுகளில் கலந்துகொள்ளலாம். அதிகபட்சமாக $1000 வரை பரிசுகளை வெல்லக்கூடிய இப்போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவுத் தேதி ஜூலை 31 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்விவரங்களை go.gov.sg/whylawmattersstudentcompetition என்ற இணையப்பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.
“இளையர்கள் சமூகப் பிரச்சினைகளில் அதிக ஆர்வம் காட்டுவதோடு சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து வலுவான கருத்துகளைக் கொண்டுள்ளனர்,” என்று சுட்டிக்காட்டிய திரு சுவா, அவர்கள் நாளைய தலைவர்கள் மட்டுமல்ல, இன்றைய தலைவர்களாகவும் செயல்படுகின்றனர் என்றார்.
ஆகையால், நமது சட்ட வரலாற்றின் பயணத்தை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டு சிங்கப்பூரை முன்னோக்கிச் செலுத்துவது அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

