சிக்லாப்பில் விரைவில் அமையவிருக்கும் சமூக மன்றத்தில் பல்வேறு புதிய, நவீன வசதிகள் இடம்பெற உள்ளன.
அந்த சமூக மன்றம் தற்போது உள்ள இடப்பரப்பைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரிதாக உருவெடுக்கும். அதாவது, அதன் மொத்த பரப்பளவு 8,000 சதுர மீட்டருக்கும் மேல் இருக்கும்.
கட்டட உச்சியில் உடற்கட்டுக்கூடம், ஓட்டப் பயிற்சிக்கு 300 மீட்டர் நீள தடம், நவீன இசைக்கூடம் போன்றவை அந்த சமூக மன்றத்தில் புதிதாக இடம்பெறும்.
ஜூ சியாட் ஒருங்கிணைப்பு நடுவம் என்ற பெயரில் அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உருவாகி வரும் அந்தக் கட்டடம் தற்போதைய சிக்லாப் சவுத் சமூக நிலையத்திற்கு மாற்றாக அமையும்.
பால்ம் ரோட்டில் (Palm Road) அமைந்துள்ள சிக்லாப் சவுத் சமூக நிலையம் கட்டப்பட்டு 65 வயது ஆகிவிட்டதால் அதற்கு விடைகொடுக்கும் வகையில், அதன் அருகிலேயே புதிய சமூக மன்றம் எழுப்பப்பட்டு வருகிறது.
புதிய வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் அந்த சமூக மன்றத்தின் கட்டுமானப் பணிகளை 2029ஆம் ஆண்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
அந்தப் புதிய கட்டடம் ஒரு சமூக வளாகமாகவும் திகழும் என்று ஜூ சியாட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வின் டோங் தெரிவித்து உள்ளார்.
“சமூக மன்றத்தின் கீழ்த்தளத்தில் 200 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“சீனப் புத்தாண்டு போன்ற விழாக்களைக் கொண்டாடுவதற்கான பலநோக்கு அரங்கம் அதில் இடம்பெறும். பூப்பந்து விளையாட்டுக்கும் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்றார் கலாசார, சமூக, விளையாட்டுத் துறை அமைச்சருமான திரு டோங்.
புதிய சமூக மன்றம் குறித்து கடந்த புதன்கிழமை (ஜனவரி 15) செய்தியாளர்களிடம் விளக்கிய அவர், அந்த நான்கு மாடிக் கட்டடத்தில் இடம்பெற உள்ள மேலும் பல வசதிகளை பட்டியலிட்டார்.
200 பேர் அமரக்கூடிய ‘பிளாக் பாக்ஸ்’ நிகழ்வரங்கம், உள்ளரங்க கூடைப்பந்து விளையாட்டு மைதானம், கண்காட்சிகள் நடத்துவதற்கான பலநோக்குக் கூடம், யோகாசனப் பயிற்சி அறை, வேளாண் சந்தை போன்றவை அந்த வசதிகள்.
சமூக மன்றத்தை எளிதாகச் சென்றடையும் வகையில் புதிய சாலை ஒன்று ஏற்படுத்தப்படும் என்று திரு டோங் அப்போது தெரிவித்தார்.
அந்தப் புதிய சமூக மன்றத்தில் இடம்பெற வேண்டிய வசதிகள் குறித்து அந்த வட்டாரக் குடியிருப்பாளர்களுடன் 2020ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் திரு டோங் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தினார்.
விரிவாக எழுப்பப்படும் அந்தக் கட்டடம் கலைகள், விளையாட்டு, புத்தாக்கம் என பல்வேறு நடவடிக்கைகளுக்கும் பொழுபோக்கிற்கும் ஏற்ற மையமாகத் திகழலாம் என அந்தக் கலத்துரையாடல்களில் குடியிருப்பாளர்கள் விருப்பம் தெரிவித்ததாக திரு டோங் கூறினார்.