புதிய சமூகச் சீரமைப்புத் திட்டம் இன நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதற்கான முக்கிய அம்சம்

3 mins read
c99f8756-c8ea-4671-a662-0a4f9d385565
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இன நல்லிணக்கப் பராமரிப்பு மசோதாவை வரவேற்பதாக ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ கூறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Byline: கிறிஸ்டஃபர் கார்டன், முகமது நசிம், லியோனார்ட் லிம் - ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’

கடந்த காலங்களில் சிங்கப்பூர் இன ரீதியான சில சம்பவங்களைச் சந்தித்தபோது பொதுமக்கள் அவற்றின் தொடர்பில் வலுவான பதில்வினை ஆற்றினர்.

சிலர் ஃபேஸ்புக் பதிவுகளிலும் வேறு சிலர் சமூக ஊடகக் காணொளிகள் வாயிலாகவும் இன்னும் சிலர் நேரடிச் சந்திப்புகளில் பங்கேற்றும் கருத்துரைத்தனர்.

சில சம்பவங்கள் மட்டும் சட்ட நடவடிக்கைக்கு வழிகோலின. இருப்பினும் பெரும்பாலான சம்பவங்கள் கசப்பான அனுபவத்துக்கும் அப்பாற்பட்ட தடயங்களை விட்டுச் சென்றன.

‘குற்றவாளிகள்’ தொடர்பில் வேற்றுமையை அகற்றிச் சமரசப்படுத்துவதற்கும் அவர்களின் மறுவாழ்வுக்குமான கட்டமைப்பு முறை இல்லை என்பதையும் அவை வெளிச்சமிட்டுக் காட்டின.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமூகச் சீரமைப்புத் திட்டத்தின் (CRI) மூலம், இத்தகைய விவகாரங்களைக் கையாள்வதன் தொடர்பில் அதிகாரிகளுக்குக் கூடுதல் பாதைகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

நடப்பில் உள்ள பல்வேறு சட்ட நடவடிக்கைகள், தேசியக் கொள்கைகள், இன நல்லிணக்கத்துக்கான சமூக வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றின் விரிவாக்கமாக நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இன நல்லிணக்கப் பராமரிப்பு மசோதாவை ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ வரவேற்கிறது.

கல்வி, வேற்றுமையை அகற்றிச் சமரசப்படுத்துதல் ஆகிய அம்சங்களை நமது இன நல்லிணக்கக் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள இந்த மசோதா வகைசெய்கிறது. அதிகம் அதிர்ச்சியூட்டாத இன ரீதியான குற்றச்செயல்களைக் கையாளும் நோக்கில் இது அமைகிறது.

இன, மொழி, சமயப் பாகுபாடில்லாத ஒற்றுமை தொடர்பான சிங்கப்பூரின் கடப்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் பாதையில் முன்னோக்கிய முக்கியமான படி இது என்பதை உணர்ந்து, ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ இந்த மசோதாவை முழுமனத்துடன் ஆதரிக்கிறது.

இந்த மசோதா, இதுவரை நாம் அடைந்த முன்னேற்றத்தைப் பாதுகாத்து, இன நல்லிணக்கம் நமது தேசிய அடையாளத்தின் முக்கிய அம்சம் என்பதை மறுஉறுதிப்படுத்துகிறது.

வேற்றுமையை அகற்றிச் சமரசப்படுத்துதல், மறுவாழ்வு போன்ற சீரமைப்பு நடவடிக்கைகளில் இந்த மசோதா கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது.

மறுவாழ்வு அம்சம் வலியுறுத்தப்படுவது, குற்றம் செய்ததாகக் கூறப்படுவோர் தங்கள் செயல்களை எண்ணிப் பார்த்து, நடத்தையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்கிறது.

கல்வித் திட்டங்கள், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் அவர்கள் இன நல்லிணக்கம் குறித்த ஆழமான புரிதல், மற்றவர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றையும் அடைய முடியும்.

மேலும், அவர்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கவும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்கவும் இந்த மசோதா தளம் அமைத்துக் கொடுக்கிறது.

பாதிக்கப்பட்டோருடனும் பரந்த சமூகத்துடனும் தொடர்பு கொள்ளும்போது சிதைந்த உறவைச் சீராக்கவும் நம்பகத்தன்மையையும் மற்றவரைப் புரிந்துகொள்ளும் தன்மையையும் மேம்படுத்தவும் இயலும்.

இன ரீதியான சம்பவங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டோரை மட்டுமன்றி வெவ்வேறு இனக் குழுக்களுக்கு இடையிலான பிணைப்புகளைப் பாதிக்கிறது. நம்பிக்கையைக் குலைக்கிறது. சமூக ஒற்றுமையைச் சிதைக்கிறது. எனவே, அவர்கள் சமூகத்துடன் தொடர்பு கொள்வது முக்கியம்.

சட்ட நடவடிக்கைகள் மட்டுமே சிதைந்த சமூக உறவுகளைச் சீராக்கப் போதுமானவை அல்ல.

இந்தச் சவால்களைச் சமாளிப்பதில் சமூகத்தின் ஈடுபாடும் தேவை என்பதை இந்த மசோதா அங்கீகரிக்கிறது. குற்றம் செய்ததாகக் கூறப்படுவோர் பாதிக்கப்பட்ட சமூகத்தினருடன் கலந்துபழகுவதன் மூலம் அச்சம்பவங்களால் ஏற்பட்ட காயத்தை ஆற்றவும் புரிந்துகொள்ளும் கலாசாரத்தைப் பேணவும் இது வழிவகுக்கிறது.

அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்துவதால் சமூகப் பதற்றங்கள் தணியும். இது எளிதானதன்று. இருந்தாலும் சமூகப் பங்காளிகள் இந்த விவகாரங்களில் பொறுப்பேற்று, உறவுகளை வலுப்படுத்தி, மேலும் இணக்கமான சமூகத்தை உருவாக்க இயலும்.

கருத்துச் சுதந்திரத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் இடையில் தேவையான சமநிலையை எட்ட இந்த மசோதா வகைசெய்கிறது. வெளிப்படையான, மரியாதைக்குரிய வகையிலான நல்லெண்ணக் கலந்துரையாடல்கள் தண்டிக்கப்படமாட்டா என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இருப்பினும், வன்முறையைத் தூண்டும் மோசமான சம்பவங்களையும் சமூக ஒற்றுமையைக் கீழறுக்கும் சம்பவங்களையும் ‘சிஆர்ஐ’ திட்டம் சட்ட நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கும்.

இதன் முக்கியச் சமூகப் பங்காளி என்ற முறையில் ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ அரசாங்கத்துடனும் இதர பங்காளிகளுடனும் இணைந்து இந்த மசோதாவின் நோக்கம் நிறைவேற அணுக்கமாகப் பணியாற்றும்.

குறிப்புச் சொற்கள்