சிங்கப்பூரிலுள்ள 5,200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்களுக்கும் ஆயிரக்கணக்கான இந்திய வர்த்தகங்களுக்கும் இடையே கூட்டு முயற்சிகளை மேலும் எளிதாக்கவுள்ளது, 2026 முதல் காலாண்டில் திறக்கப்படவுள்ள புதிய நிறுவனம்.
‘கேசிசிஎஸ் - நிப்போன் பிரைவேட் லிமிடெட்’ எனும் அந்நிறுவனத்துக்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கி வைத்தார் ‘கே-கேசிசிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடட்’ (KCCS) நிறுவனரும் தோக்கியோ தமிழ்ச் சங்க உயர்நிலைக் குழு உறுப்பினருமான கருணாநிதி காசிநாதன்.
இதுவரை இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான பாலமாகச் செயலாற்றிவந்துள்ள கருணாநிதி, சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளிலுள்ள இந்தியர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் வர்த்தகப் பிணைப்பை ஏற்படுத்த விரும்புகிறார்.
“இதன்வழி, ஜப்பானிய முதலீடுகளைச் சிங்கப்பூர் வழியாகக் கொண்டுசெல்லத் திட்டமிடுகிறோம். சிங்கப்பூரிலுள்ள இந்தியர்கள் பயன்பெறும் வகையில் முயற்சிகளை முன்னெடுப்போம்,” என்றார் அவர். புதிய நிறுவனத்துக்கு அவர் இயக்குநராகவும் ‘ஸ்டால்வார்ட் கன்சல்டிங் சர்விசஸ்’ இயக்குநர் வேலுச்சாமி கணக்காய்வாளராகவும் பணிபுரிவர். நிறுவனம், சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழிற்சபையுடன் (SSACCI) இணைந்து செயல்படும்.
“கேசிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். சிங்கப்பூரிலிருந்து ஜப்பானுக்கு வர்த்தக நடவடிக்கைகளைக் கொண்டுசெல்ல விரும்புகிறோம்,” என்றார் SSACCI தலைவர் முனைவர் சின்னு பழனிவேலு.
இந்திய இளையர்க்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்துவதோடு, இருநாட்டு வர்த்தக, தொழில்நுட்ப இணைமுயற்சிகளையும் 2012 முதல் ஏற்படுத்திவந்துள்ளது கே-கேசிசிஎஸ் நிறுவனம். சென்னையில் ஜப்பானிய மொழிப் பள்ளியையும் அது நடத்துகிறது.
மறுசுழற்சிசெய்யக்கூடிய எரிசக்தி, பகுதி மின்கடத்தி, கரிமப் புள்ளிகள், கழிவுப்பொருள் நிர்வாகம், சுகாதாரம் எனப் பல துறைகளிலும் இந்தியர்களுக்கும் ஜப்பானுக்கும் இடையே வர்த்தக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார் திரு கருணாநிதி.
ஜப்பானியர்களுடன் கூட்டுமுயற்சிகளில் ஈடுபட விரும்புவோர், தம் நிறுவனத்தில் குறைந்தது 51 விழுக்காட்டுப் பங்குகளை ஜப்பானியரிடம் கொடுத்தால், அனைத்துலக ஒத்துழைப்புக்கான ஜப்பானிய வங்கி (ஜேபிஐசி) வழங்கும் ஆண்டுக்கு 1 விழுக்காட்டு வட்டியுடனான கடன்மூலம் பயன்பெறலாம் என்றார் திரு கருணாநிதி. ஜப்பானுக்கு வெளியே சென்று வர்த்தகத்தைத் தொடங்கவோ விரிவாக்கவோ விரும்பும் ஜப்பானியர்களுக்கு இக்கடன் வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத்துடன் செயல்பட விரும்பும் நிறுவனங்கள், ஜப்பான் அனைத்துலக ஒத்துழைப்பு அமைப்பு (ஜிஐசிஏ) வழங்கும் ‘ஓடிஏ’ (Official Development Assistance) எனும் வட்டியில்லாக் கடன் மூலம் பயனடையலாம். இக்கடன், சாலைகள், ரயில் பாதைகள், அறிவார்ந்த நகரங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த ஜப்பான் அரசாங்கம், வளரும் நாடுகளின் மாநில, மத்திய அரசுகளுக்கு வழங்கும் கடனாகும்.
ஜப்பானிலிருந்து நிதி பெற விரும்பும் நிறுவனங்கள் வருமானம் ஈட்ட வேண்டும்; திறன்மிக்க அணியினரைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் இருப்பதாகவும் திரு கருணாநிதி கூறினார்.
சிங்கப்பூரில் சுற்றிலும் பேரங்காடிகளில், தொழிற்சாலைக் கட்டடங்களில், 200 கூட்டுரிமை வீடுகளில் 800க்கும் மேற்பட்ட மின்வாகன மின்னூட்டு நிலையங்களை வைத்துள்ள ‘எம்என்எல் சொலியூஷன்ஸ்’ இணை நிறுவனர் நாகராஜன் சத்தியமூர்த்தி, ஜேபிஐசி நிதி கிடைக்கும் என்றால் நிறுவனத்தில் 51 விழுக்காட்டுப் பங்குகளைத் தரத் தாம் தயார் என்றார்.
“இதுவரை யுஓபி வங்கி வழியாக $6 மில்லியன் வரை நிதி கிடைத்துள்ளது. ஆனால் $30 மில்லியன் நிதி கிடைத்தால்தான் அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில் 10-15 சந்தைப் பங்கைப் பிடிக்க முடியும்,” என்றார் அவர்.
“வெளிநாட்டுக்கு விரிவடைய விரும்பும் நிறுவனங்களுக்கு ஜப்பான் பெரும் வளங்களைக் கொண்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் எனப் பலவற்றிலும் இணைமுயற்சிகள் சாத்தியம்,” என்றார் SSACCI துணைத் தலைவர் முனைவர் ராம்.
2026 பிப்ரவரி 26 முதல் 28ஆம் தேதி வரை ஜப்பானில் உயர்நிலை நபர்களுடனான சந்திப்பில் பங்கேற்கத் திரு கருணாநிதி, சிங்கப்பூரிலுள்ள வர்த்தகங்களையும் அழைத்துச் செல்லவுள்ளார். பங்கேற்க விரும்புவோர் kk@kccs.co.in அல்லது chinnu@stamfordassurance.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

