பங்கு வணிக நிறுவனமான ‘ஸெரோதா’வின் (Zerodha) இணை நிறுவனரான நிகில் காமத், சிங்கப்பூரின் உணவுக் கலாசாரத்துடன் இந்தியாவின் உணவுப் பழக்கத்தை ஒப்பிட்டுப் பேசியதால் சர்ச்சை வெடித்துள்ளது.
பெருஞ்செல்வந்தரான நிகில், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) தமது சிங்கப்பூர் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“சிங்கப்பூரில் ஏறக்குறைய வீட்டில் சமைப்பது என்பதே கிடையாது. பெரும்பாலான சிங்கப்பூரர்களின் வீட்டில் சமையலறை கிடையாது அல்லது வீட்டில் சமைப்பது கிடையாது,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் நிகில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் பொருளியல் சூழல் மாறினால் இதே போன்ற கலாசாரம் வருமா என்றும் அவர் கேட்டிருந்தார்.
“நான் இவ்வாரம் சிங்கப்பூரில் இருந்தேன். நான் சந்தித்த பெரும்பாலானவர்கள் வீட்டில் சமைப்பது இல்லை. இந்தியாவும் இதனைப் பின்பற்றினால் உணவகங்களில் முதலீடு செய்வது அல்லது திறப்பது மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். ஆனால், தென்கிழக்கு ஆசியாவில் இருப்பது போல முத்திரை பதித்த உணவகங்கள் இல்லை,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் உணவு சேவைத் துறை பின்தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் 55 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் உணவுச் சந்தையில் 30 விழுக்காடு மட்டுமே முறையாகச் செயல்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
சுவிகி, பைய்ன் அண்ட் கம்பெனியை குறிப்பிட்டுப் பேசிய அவர், மற்ற நாடுகளைவிட இந்தியாவில் வீட்டில் சமைக்காத உணவு குறைவாகவே உண்ணப்படுகிறது என்றார்.
2023ல் சீனாவில் வாடிக்கையாளர் ஒருவர் சராசரியாக 33 முறை வீட்டில் சமைக்காத உணவைச் சாப்பிட்டார். அதற்கு அடுத்ததாக 27 முறையுடன் அமெரிக்கா, 19 முறையுடன் சிங்கப்பூர், 14 முறையுடன் தென்கொரியா இருக்கிறது. இந்தியா ஐந்து முறையுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது என்று நிகில் தெரிவித்தார்.
புதிய சர்ச்சையைக் கிளப்பிய இவரது கூற்று பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஒரு விமர்சகர் தமது பதிவில் இந்தியக் கலாசாரத்தில் வீட்டில் சமைத்த உணவுக்கு உள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிடுவது இந்தியக் கலாசாரத்தில் பிரிக்க முடியாத அங்கம். இது, அவ்வளவு விரைவில் மாறிவிடாது,” என்று சமூக ஊடகம் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார்.

